சென்னை : இரண்டரை மாதங்களில், 100 டி.எம்.சி., உபரிநீரை காவிரியில் திறந்து, கர்நாடகா கணக்கு காட்டியுள்ளது.
தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., நீரை கர்நாடகா அணைகளில் இருந்து திறக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்கவேண்டிய நீரின் அளவும், காவிரி மேலாண்மை ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
நடப்பு நீர் வழங்கும் தவணை காலம் ஜூனில் துவங்கியது. முதல் மாதத்திலேயே கர்நாடகா முறைப்படி நீர் திறக்காமல் ஏமாற்றியது. ஜூலையில் முறைப்படி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அந்த உத்தரவையும் கர்நாடகா மதிக்கவில்லை. திடீரென தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து, கர்நாடகா அணைகள் நிரம்பின. இதனால், ஜூலை இறுதியில் காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.
ஜூன் 1 முதல் ஆக., 13 வரை, 59 டி.எம்.சி., நீரை கர்நாடகா திறந்திருக்க வேண்டும். ஆனால், 159 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, 100 டி.எம்.சி., உபரி நீரை திறந்து காவிரியை வெள்ள வடிகாலாக பயன்படுத்தி, கர்நாடகா கணக்கு காட்டியுள்ளது.