தி.மலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி புதிதாக நான்கு மாநகராட்சிகள் துவக்கம்

சென்னை: திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி நகராட்சிகளை, மாநகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங்கினார்.

மேலும், ஸ்ரீபெரும்புதுார், மாமல்லபுரம், திருவையாறு பேரூராட்சிகளை, நகராட்சிகளாக தரம் உயர்த்துவதற்கான ஆணைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், 770 கோடி ரூபாய் மதிப்பில் முடிக்கப்பட்ட 103 திட்டப் பணிகளை துவக்கி வைத்து, 1,192.45 கோடி ரூபாய் மதிப்பிலான 30 புதிய திட்டப் பணிகளுக்கு, முதல்வர் ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டினார்.

குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்களுக்கு, 1.05 கோடி ரூபாயில், 10 புதிய பொலிரோ வாகனங்கள்; சென்னை பெருநகர் குடிநீர் வாரியத்திற்கு, 28.55 கோடி ரூபாயில், 58 கழிவுநீரகற்று வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இவற்றின் சேவையை நேற்று முதல்வர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, பெரியகருப்பன், சென்னை மேயர் பிரியா, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன், மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் பங்கேற்றனர்.

ராமநாதபுரம் அரசு சட்டக் கல்லுாரியில், 76.60 கோடி ரூபாயில் புதிய கட்டடம் மற்றும் விடுதி கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதில், 26 வகுப்பறைகள், கருத்தரங்கு கூடம், உள்விளையாட்டு அரங்கம், மாதிரி நீதிமன்ற அரங்கம், கலையரங்கம் போன்றவை உள்ளன.

திருவள்ளூர் மாவட்டம் பட்டறைப்பெரும்புதுார், சென்னை அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி வளாகத்தில், 1.57 கோடி ரூபாய் செலவில் கால்பந்து மற்றும் கிரிக்கெட் திடல் உருவாக்கப்பட்டு உள்ளது. இவற்றை முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். அமைச்சர் ரகுபதி, தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, சட்டத்துறை செயலர் ஜார்ஜ் அலெக்சாண்டர், சட்டக்கல்வி இயக்குனர் விஜயலட்சுமி பங்கேற்றனர்.

நகராட்சி நிர்வாக இயக்குனரகம் சார்பில் 29 பேர்; பேரூராட்சிகள் இயக்குனரகம் சார்பில் 18; குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் 97 பேர் என மொத்தம் 144 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

மேலும், 27 பேருக்கு, கருணை அடிப்படையிலான பணி நியமன ஆணைகளும் வழங்கப்பட்டன.

திருவண்ணாமலை, நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதற்கான ஆணைகளை, அம்மாநகராட்சிகளின் மாமன்ற தலைவர்களிடம், முதல்வர் ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *