மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, பல உலகத் தலைவர்களுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார். ஐ.நா பொதுச் சபைக் கூட்டத் தொடருக்கு இடையில், பிரதமர் மோடி பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸைச் சந்தித்தார். காசாவில் நிகழும் போர் சூழல், மனிதாபிமான நெருக்கடி குறித்து
தனது கவலைகளை தெரிவித்தார்.
பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், பாலஸ்தீனத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கு இந்தியாவின் ஆதரவை மீண்டும் வலியுறுத்துகிறது. பாலஸ்தீன மக்களுடனான நீண்டகால நட்பை மேலும் வலுப்படுத்துவது பற்றிய கருத்துக்கள் பரிமாறிக் கொண்டப்பபட்டது என்று கூறியுள்ளார்.
முன்னதாக, இஸ்ரேலுக்கு எதிராக ஐ.நா பொதுச் சபையில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்காமல் புறக்கணித்தது. சட்டவிரோதமாக இஸ்ரேல் படை பாலஸ்தீனத்தில் ஆக்கிரமித்த பகுதிகளில் இருந்து இன்னும் 12 மாதங்களுக்குள் வெளியேறி போர் சூழலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று கோரும் தீர்மானத்தில் இந்தியா ஐ.நா பொதுச் சபையில் வாக்களிக்கவில்லை.
193 உறுப்பினர்களைக் கொண்ட பொதுச் சபையில் 124 நாடுகள் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தன, 14 நாடுகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தியா உட்பட 43 நாடுகள் வாக்களிக்கவில்லை.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் படைகளுக்கு இடையே கடந்த ஒரு வருடமாக போர் நடந்து வருகிறது. அக்டோபர் 7 ஆம் தேதி ஹமாஸ் இஸ்ரேலைத் தாக்கி, 1,200 பேரைக் கொன்றது மற்றும் பலரை பணயக் கைதிகளாகக் கைப்பற்றிய பின்னர் மோதல் தொடங்கியது.
பாலஸ்தீனத்தில் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இஸ்ரேல் ஹமாஸ் மீது எதிர் தாக்குதல் நடத்தியது. இதுவரை 41,000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த மோதல் மேற்கு ஆசியாவில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.