புதுடில்லி, அதானி மற்றும் செபி விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிடவும், ‘செபி’ தலைவர் பதவி விலகக் கோரியும் ஆக., 22ல் நாடு முழுதும் போராட்டம் நடத்தப் போவதாக காங்கிரஸ் அறிவித்துள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக வைத்து செயல்படும் பிரபல முதலீட்டு ஆராய்ச்சி நிறுவனம் ஹிண்டன்பர்க். இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், அதானி குழுமம், பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’யின் தலைவர் மாதாபி, அவரது கணவர் ஆகியோர் மீது பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தியது. இது, அரசியல் ரீதியாக பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில், டில்லியில் அக்கட்சியின் நிர்வாகிகள் கூட்டம் நேற்று நடந்தது. இதில், எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் மற்றும் கட்சியின் பொதுச் செயலர்கள், மாநில தலைவர்கள் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் அதானி முறைகேடு விவகாரத்தில் பார்லிமென்ட் கூட்டுக்குழு விசாரணை வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
செபி மற்றும் அதானி குழுமம் இடையேயான தொடர்பு வெளிப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும், மத்திய அரசு உடனடியாக செபி தலைவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இந்த கோரிக்கைகளை முன்வைத்தும், ஜாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்டவற்றை வலியுறுத்தியும், ஆக., 22ல் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் தலைவர் கார்கே அறிவித்தார்.
விரைவில் நடக்க உள்ள ஹரியானா, மஹாராஷ்டிரா, ஜார்க்கண்ட், ஜம்மு – காஷ்மீர் சட்டசபை தேர்தல்கள் குறித்தும் இதில் விவாதிக்கப்பட்டது.