சிகாகோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், திருச்சியில் ரூ.2,000 கோடி முதலீட்டில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைக்கவும், காஞ்சிபுரத்தில் ரூ.666 கோடி முதலீட்டில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்துக்காகவும் ஜாபில், ராக்வெல் ஆட்டோமேஷன் நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகளை ஈா்க்கும் வகையில், அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ மற்றும் சிகாகோ நகரங்களில் முதல்வா் மு.க.ஸ்டாலின் பயணம் மேற்கொண்டுள்ளர். இதுவரையில் 14 முன்னணி தொழில் நிறுவனங்களுடன் ரூ.4,350 கோடி முதலீட்டுக்கான புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதன் தொடர்ச்சியாக, செப். 9-ம் தேதி சிகாகோவில் ‘பார்ச்சூன் 500’ நிறுவனங்களான ஜாபில், ராக்வெல் ஆட்டோமேஷன், ஆட்டோடெஸ்க் ஆகிய நிறுவனங்களுடன் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதன் விவரம்:
*ஆப்பிள், சிஸ்கோ, ஹெச்பி, டெல் போன்ற முன்னணி நிறுவனங்களுக்கு எலெக்ட்ரானிக்ஸ் தொழில் உற்பத்தி சேவைகள், தீர்வுகளை வழங்குவதில் ஜாபில் நிறுவனம் (Jabil Inc.) முன்னணியில் உள்ளது. அமெரிக்கா, சீனா, இந்தியா, மலேசியா, மெக்சிகோ, சிங்கப்பூரில் இதன் உற்பத்தி நிறுவனங்கள் உள்ளன. திருச்சியில் ரூ.2,000 கோடி முதலீட்டில் மின்னணு உற்பத்தி நிறுவனம் அமைக்க இந்த நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
*தொழில் துறை ஆட்டோமேஷன், டிஜிட்டல் மாற்றம் தொடர்பான உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்று ராக்வெல் ஆட்டோமேஷன் (Rockwell Automation) நிறுவனம். காஞ்சிபுரத்தில் ரூ.666 கோடி முதலீட்டில் மின்னணு உற்பத்தி நிறுவன விரிவாக்கத்துக்காக இந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
*கட்டிடக் கலை, பொறியியல், கட்டுமானம், உற்பத்தி, ஊடகம், கல்வி, பொழுதுபோக்கு தொழில்களுக்கான மென்பொருள் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்கி வரும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனம் ஆட்டோடெஸ்க் (Autodesk). தமிழக இளைஞர்களின் திறன்களை மேம்படுத்தவும், குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள், ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில் துறை சுற்றுச்சூழல் அமைப்புகளில் போட்டித் தன்மையை மேம்படுத்தவும் இந்த நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் மொத்தம் 5.365 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த நிகழ்வில் தமிழக தொழில் துறை அமைச்சர் டிஆர்பி.ராஜா, துறை செயலர் வி.அருண்ராய், தொழில் வழிகாட்டி நிறுவன தலைமை செயல் அலுவலர் வே.விஷ்ணு உள்ளிட்டோர உடனிருந்தனர்.