தமிழகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க ஆட்சி நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் மாற்றம் நிகழும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, புதிய அமைச்சர்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை பதவியேற்ற நிலையில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பொறுப்பேற்றார்.
இந்நிலையில், துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு தனி செயலாளர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதன்படி, உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ் துணை முதலமைச்சர் உதயநிதியின் செயலராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
யார் இந்த பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ்?
உத்தரப் பிரதேச மாநிலத்தை பூர்வீகமாக கொண்டவர் பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ். இவர் 1992 ஆம் ஆண்டு தமிழ்நாடு ஐ.ஏ.எஸ் பேட்சை சேர்ந்தவர். முதன்முதலில் திண்டுக்கல் மாவட்டத்தில் தனது பயிற்சியை தொடங்கினார். வட ஆற்காடு மாவட்டத்தில் துணை ஆட்சியராக இளநிலை பிரிவில் இருந்தார். இதையடுத்து வருவாய்த்துறை, தொழில்துறை, கிராமப்புற மேலாண்மை, நில வருவாய் மேலாண்மை, சமூக நீதி மற்றும் மனித வள மேம்பாடு, நிதி உள்ளிட்ட துறைகளில் துணை செயலாளராக இருந்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு தாய்லாந்து நாட்டில் மனித வளமேம்பாடு தொடர்பாக பயிற்சி பெற்று திரும்பினார். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை செயலாளராக பணியாற்றினார். அப்போது தான் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு ஆகியவற்றுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இது பெரும் சர்ச்சையானது.
அந்த சமயத்தில் ஊழியர் ஒருவரின் பணப் பலன்கள் தொடர்பான வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. ஆனால் அதனை முறையாக செயல்படுத்தாத காரணத்தால் பள்ளிக் கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் அதிகாரிகளுக்கு இரண்டு வாரங்கள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.
பின்னர், கைத்தறி மற்றும் காதி துறையின் முதன்மை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டார். மேலும் மின்சாரம் மற்றும் மின் பகிர்மான கழகத்தின் நிர்வாக இயக்குநராக இருந்தார். சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் மேலாண் இயக்குநராக பதவி வகித்துள்ளார். இதுதவிர நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை செயலாளராகவும் இருந்தார்.