ராமதாஸ், ரஜினிகாந்த்… உதயநிதிக்கு அரசியல், சினிமா பிரபலங்கள் வாழ்த்து

கடந்த சில மாதங்களாக உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட உள்ளதாக செய்திகள் உலா வந்த நிலையில், உதயநிதி ஸ்டாலின் நேற்று (செப்.29) தமிழ்நாட்டின் துணை முதல்வராகப் பதவியேற்றார்.

துணை முதல்வராகியுள்ள உதயநிதிக்கு தி.மு.க கூட்டணி கட்சித் தலைவர்கள் மட்டுமல்லாமல், பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், சினிமா பிரபலங்கள் எனப் பலர் வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

அதன்படி பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது X பக்கத்தில், தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட்டுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது பணி சிறக்கவும், சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

துணை முதல்வராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

அதே போல் நடிகர் சிவகார்த்திகேயன் உதயநிதிக்கு எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நடிகர் சத்யராஜ் வீடியோ பதிவு மூலம் தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில், அமைச்சர், அன்பு தம்பி உதயநிதி ஸ்டாலின் துணை முதலமைச்சராக பதவியேற்றுள்ளது மட்டற்ற மகிழ்ச்சி. சமூக நீதி காப்பதில் சமரசம் இல்லாத போராளி. அவர் பணி சிறக்கட்டும் எனக் கூறியுள்ளார்.

நடிகர் தனுஷ் தனது வாழ்த்து செய்தியில், “தமிழகத்தின் துணை முதலமைச்சராகி உள்ள அண்ணன் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்” என்று கூறினார்.

இயக்குனர் மாரி செல்வராஜ் தனது வாழ்த்து செய்தியில், “இன்று தமிழ்நாட்டின் துணைமுதல்வராக பொறுப்பேற்றிற்கும் அன்பிற்கும் மரியாதைக்கும் உரிய உதயநிதி அவர்களின் பேராற்றல் மிக்க பணி சிறக்கவும் புகழ் சிறக்கவும் வாழ்த்தி மகிழ்கிறேன்” என்றார்.

நடிகர் சந்தானம் உதயநிதியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளார். உதயநிதியை சந்தித்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு, “மனமார்ந்த வாழ்த்துகள் டியர் முதலாளி.. இந்தத் தலைமைப் பதவியிலும் இன்னும் நிறைய வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகள்” என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *