புதுடில்லி: வங்கதேச விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளதா என எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கேள்வி எழுப்பினார். அக்கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பதிலளித்தார்.
வங்கதேச விவகாரம் தொடர்பாக டில்லியில் அனைத்துக்கட்சி கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்தது.ஜெய்சங்கர் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ராகுல் பேசியதாவது: வங்கதேசத்தில் நடந்த வன்முறை சம்பவங்களின் பின்னணியில் வெளிநாட்டு சதி குறிப்பாக பாகிஸ்தானின் பங்கு ஏதும் உள்ளதா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து ஜெய்சங்கர் கூறியதாவது: வங்கதேச சூழ்நிலையை பிரதிபலிக்கும் வகையில், பாகிஸ்தான் ராணுவத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு வந்துள்ளார். எனவே பாகிஸ்தான் பங்கு குறித்த கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது. வங்கதேச நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
இக்கூட்டத்தில், வங்கதேசத்தில் ஏற்பட்ட கலவரம், எப்படி தோன்றியது என்பது குறித்து விளக்கமளித்ததுடன், தற்போதைய நிலவரம் மற்றும் ஷேக் ஹசீனா இந்தியாவிற்கு எப்படி தப்பி வந்தார் என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, வங்கதேச விவகாரத்தில் மத்திய அரசுக்கு முழு ஆதரவு அளிப்பதாக எதிர்க்கட்சிகள் உறுதி அளித்து உள்ளன.