தென்னிந்தியா, பாலிவுட் எல்லாம் தாண்டி ஹாலிவுட் வரை தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்தியவர் நடிகர் தனுஷ். இன்னொரு பக்கம் நடிப்பையும் தாண்டி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் மற்றும் இயக்குநர் என இன்னும் பல முகங்கள் அவருக்கு உண்டு.
‘பவர் பாண்டி’ படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமான தனுஷ், ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது தனது 50-வது படமாக ‘ராயன்’ படத்தை தானே இயக்கி நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் இணைந்து துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், பிரகாஷ் ராஜ், அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கடந்த 26ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தொடர்ந்து 2வது வாரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர் சரவணன் தனது குடும்பத்தினருடன் சேலத்தில் உள்ள திரையரங்கில் ராயன் திரைப்படத்தை கண்டுகளித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது;
“தனுஷ் இயக்கத்தில் நான் நடித்த முதல் படம். அவருடன் நடிப்பதும் இதுவே முதல்முறை. இந்தப் படம் பிளாக்பஸ்டர் ஆனது மகிழ்ச்சி அளிக்கிறது. நடிகர் தனுஷிடம் நட்பாக பேசலாம். ஆனால் இயக்குநர் தனுஷிடம் அப்படி பேச முடியாது. அவரை இயக்குநராக பார்த்தாலே பயமாக உள்ளது.
இயக்குநர் தனுஷ் பேய் மாதிரி வேலை செய்வார். எம்.ஜி.ஆர். படத்தை இயக்கி வெற்றி பெற்றது போல நடிகர் தனுஷ் படத்தை இயக்கி பிளாக்பஸ்டர் கொடுத்துள்ளார்.
எந்த நடிகராலும் தனுஷ் போல படத்தை இயக்க முடியாது. படத்தை இயக்குவதில் நடிகர் தனுஷ் கிங்” என்றார்.