சென்னை : ”தமிழகத்தில் நடப்பது ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு; திராவிட கருத்தியல் கொண்ட அரசு,” என, முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவில், அவர் பேசியதாவது: என் உணர்வுகளை எப்படி விவரிப்பது என்று சொல்ல முடியாத மகிழ்ச்சியில் நிற்கிறேன்.
நம்மை எல்லாம் ஆளாக்கிய, ‘நா – நயம்’ மிக்க தலைவரான கருணாநிதிக்கு, நுாற்றாண்டு விழா நாயகருக்கு, சிறப்பு செய்யும் வகையில், 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இதுவரை நாம் கொண்டாடினோம். இதோ இந்தியாவே கொண்டாடுகிறது. அதன் அடையாளமே இந்த விழா.
பாதுகாவல் அரண்
எத்தனையோ சிறப்புகளுக்கு தகுதியானவர் கருணாநிதி. இது, உலகம் ஒப்புக்கொண்ட உண்மை. தமிழக சட்டசபையில் அவரது உருவப்படத்தை, அன்றைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.
ஓமந்துாரார் வளாகத்தில் உள்ள சிலையை, அப்போதைய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
அறிவாலயத்தில் உள்ள சிலையை, சோனியா திறந்து வைத்தார். முரசொலி அலுவலகத்தில் உள்ள சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்.
கருணாநிதி நுாற்றாண்டு நினைவு நாணயத்தை, நாட்டின் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ளார். இந்திய ஜனநாயகத்தின் பாதுகாவல் அரணாக இருந்த கருணாநிதி உருவம் தாங்கிய நாணயத்தை வெளியிட, அவர் வந்திருப்பது மிகவும் பொருத்தமானது.
பொதுவாழ்வில், 80 ஆண்டுகள் இயங்கி, அதில் அரை நுாற்றாண்டு காலம், தமிழகத்தின் திசையை தீர்மானித்தவர் கருணாநிதி. அவருக்கு இந்தியாவே வருகை தந்து சிறப்பித்துள்ளது. கருணாநிதி நிறைவடைந்த நாள் முதல், நாள்தோறும் அவர் புகழை போற்றிக் கொண்டிருக்கிறோம்.
கடந்த ஓராண்டாக, அவர் நுாற்றாண்டு விழாவையொட்டி, அவரின் சாதனைகளை கூறும் நிகழ்ச்சிகளை நடத்தினோம். பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினோம்.
அதில், முத்தாய்ப்பாக சிலவற்றை சொல்ல வேண்டுமானால், கிண்டியில் கருணாநிதி நினைவு உயர் சிறப்பு மருத்துவமனை; மதுரையில் கருணாநிதி நினைவு நுாற்றாண்டு நுாலகம்; பெண்களுக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமை திட்டம்; கிளாம்பாக்கத்தில் கருணாநிதி நுாற்றாண்டு பஸ் முனையம், இவற்றுக்கு எல்லாம் மகுடமாக, அவர் உருவம் தாங்கிய நாணயம் வெளியிடப்படுகிறது.
நாணயம் வெளியிட ஒப்புதல் அளித்த, பிரதமர் நரேந்திர மோடி, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு நன்றி.
நவீன தமிழகம்
இயற்பியல் பேராசிரியராக பணியை துவக்கி, ஆர்வம் காரணமாக அரசியலில் நுழைந்து, தன் கடின உழைப்பால் எம்.எல்.ஏ.,வாகி, பின் உ.பி., முதல்வரானவர் ராஜ்நாத்சிங். தற்போது ராணுவ அமைச்சராக உள்ளார்.
நவீன தமிழகத்தை உருவாக்கிய சிற்பி கருணாநிதி தான். அவர் உருவாக்கிய கட்டமைப்புகளை சொல்ல ஒரு நாள் போதாது.
சாதனைகளை கூற, நாம் விழாவை நடத்தி கொண்டிருக்கும் கலைவாணர் அரங்கிலிருந்து துவங்கலாம். பாலர் அரங்கமாக இருந்ததை, மிகப்பெரிதாக கட்டி, கலைவாணர் அரங்கம் என்று மாற்றினார். தமிழ் மொழிக்கு செம்மொழி தகுதியை பெற்று தந்தார். மெட்ராசை சென்னையாக்கினார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், குடிசை மாற்று வாரியம் உருவாக்கினார். தமிழகத்தில், 48 அணைக்கட்டுகள், கல்லுாரிகள், பல்கலைகள் துவக்கினார். சென்னையை சுற்றி அண்ணாசாலை, அண்ணா மேம்பாலம், கத்திப்பாரா பாலம், கோயம்பேடு பாலம், செம்மொழி பூங்கா, டைடல் பூங்கா, ஓமந்துாரார் மருத்துவமனை, மெட்ரோ ரயில், அடையாறு ஐ.டி., காரிடர், நாமக்கல் கவிஞர் மாளிகை என, அனைத்தும் கருணாநிதியால் உருவாக்கப்பட்டவை.
கடந்த 15ம் தேதி, 78வது சுதந்திர தினத்தை கொண்டாடினோம். அன்று அனைத்து மாநில முதல்வர்களும் கொடியேற்றினர். அதற்கான உரிமையை பெற்று தந்தவரும் கருணாநிதி தான்.
அவர், அகில இந்தியாவும் போற்றும் தலைவராக உயர்ந்து நிற்கிறார். செயல்படுவதும், செயல்பட வைப்பதும் தான் அரசியல் என்ற இலக்கணத்திற்கு இலக்கியமாக இருந்தவர்.
பாகிஸ்தானுக்கு கண்டனம்
ஒரு கட்சி தலைவராக, ஒரு நாட்டின் தலைவராக எப்போதும் சிந்தித்தார்; செயல்பட்டார். கடந்த 1971ல் இந்தியாவை பாகிஸ்தான் அச்சுறுத்திய போது, தமிழக சட்டசபையில், பாகிஸ்தான் படையெடுப்பு கண்டன தீர்மானம் நிறைவேற்றினார்.
போரின் போது நாட்டின் பாதுகாப்புக்காக, 6 கோடி ரூபாய் நிதி வழங்கினார். போரில் வீரமரணமடைந்த வீரர்கள் குடும்பத்துக்கு நிதி, நிலம் வழங்கினார்.
கார்கில் போரின் போது, இந்தியாவிலேயே அதிக தொகையாக வாஜ்பாயிடம், 50 கோடி ரூபாய் வழங்கினார். மாநில உரிமைகளுக்காக குரல் கொடுத்தார். அதேநேரம் நாட்டின் பாதுகாப்பு என்று வரும் போது கை கொடுத்தவர்.
நாணயத்திற்கு இன்னொரு பொருள் உண்டு. கொடுத்த வாக்கை காப்பாற்றுவதற்கு பெயரும் நாணயம்.
சொன்னதை எல்லாம் செய்து காட்டியது அவரது நாணயத்திற்கு எடுத்துக்காட்டு. அவர் வழியில் திராவிட மாடல் அரசு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்றி, கருணாநிதி அரசாக செயல்படுகிறது.
இது என் அரசு அல்ல; நம் அரசு. ஒரு கட்சியின் அரசல்ல; ஒரு இனத்தின் அரசு; திராவிட கருத்தியல் கொண்ட அரசு. இதை என்னுள் ஏற்படுத்தியவர் கருணாநிதி. அவரே இயக்கி கொண்டிருக்கிறார்.
ஒரு மனிதன் வாழ்க்கை அவரது மரணத்திற்கு பின் கணகக்கிடப்பட வேண்டும் என்று, சொன்னவர் கருணாநிதி. இன்று அவரது முகம் தாங்கிய நாணயத்தில், ‘தமிழ் வெல்லும்’ என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது என்றால், இதுவும் அவரது சாதனை தான்.
இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.