நாகப்பட்டினம் : மத்திய அரசின் வக்பு சட்ட திருத்த மசோதாவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட் செல்வோம் என, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய்தீன் கூறினார்.
நாகப்பட்டினத்தில், காதர் மொய்தீன் கூறியதாவது: மத்திய அரசின் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா, வக்பு வாரியமே இல்லாமல் செய்வதற்காக கொண்டு வரப்பட உள்ளது. சட்ட திருத்தம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழுவில் ஒரு முஸ்லிம் கூட இல்லை. இந்தியாவில் முஸ்லிம்களும் இருக்க கூடாது என, மத்திய அரசு நினைக்கிறது.
செல்வந்தர்கள் தானமாக கொடுத்ததை பாதுகாக்கவே வக்பு வாரியம் உருவாக்கப்பட்டது. பள்ளிவாசல்கள், தர்காக்களுக்கு செல்வந்தர்கள் தானமாக வழங்கிய நிலத்தை பறிப்பதற்காகவே, சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான சட்ட திருத்த மசோதாவை எந்த நிலையிலும் எதிர்ப்போம், எதிராக சுப்ரீம் கோர்ட் செல்வோம். இவ்வாறு அவர் கூறினார்.