சென்னை : ‘அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 62 ஆக உயர்த்தப்பட உள்ளதாக பரவும் தகவல் வதந்தி. அவ்வாறு எந்த ஆலோசனையும் இல்லை’ என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
தற்போது தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக உள்ளது. அரசு நிதி நெருக்கடியில் இருப்பதால் அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 60ல் இருந்து 62 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக சமீபத்தில் தகவல் பரவியது.
பாதிக்கப்படுவர்
இதற்கு அரசு ஊழியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்தன. அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். ஓய்வு வயதை அதிகரித்தால் வேலைக்காக காத்திருக்கும் இளைஞர்கள் பாதிக்கப்படுவர்.
எனவே ஓய்வு வயதை அதிகரிக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இந்நிலையில், ஓய்வு வயதை அதிகரிப்பதாக பரவிய தகவல் வதந்தி என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
15 நாட்கள்
இதுதொடர்பாக அரசின் தகவல் சரி பார்ப்பகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
அரசு ஊழியர் ஓய்வு வயதை 60ல் இருந்து 62 ஆக மாற்றி தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமை செயலகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இன்னும் 15 நாட்களுக்குள் அரசாணை வெளியிட வாய்ப்பு உள்ளது என்ற தகவல் பரப்பப்படுகிறது; இது முற்றிலும் வதந்தியே.
அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை 62 ஆக மாற்ற எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படவில்லை. அப்படியான எந்த ஆலோசனையும் இல்லை. வதந்தியை பரப்பாதீர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.