உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலில் 3பேர் உயிரிழந்துள்ளனர்.
உக்ரைன் மீது ரஷ்யா மிகப்பெரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களுக்கு எதிராக உக்ரைன் முழுவதும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் தலைநகர் கீவில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.
ரஷ்யா நடத்திய தாக்குதலில் குறைந்தது ஏழு குண்டு வெடிப்புகளின் சத்தம் கேட்டதாக அப்பகுதிகள் மக்கள் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளனர். இந்த தாக்குதலில் தற்போது வரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேற்கு லுட்ஸ்க், கிழக்கு டினிப்ரோ மற்றும் தெற்கு சபோரிஜியா பகுதிகளைச் சார்ந்த மக்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ரஷ்யா 11 TU-95 ஏவுகணைகளை வான்வெளியில் வைத்திருப்பதாகவும் பல ஏவுகணைகளை ஏவி வருவதாகவும் உக்ரைன் இராணுவம் உறுதி செய்துள்ளது. உக்ரைனின் கிழக்கு, வடக்கு, தெற்கு மற்றும் மத்திய பகுதிகளை நோக்கி ரஷ்ய ட்ரோன்களின் பல குழுக்கள் நகர்வதாகவும், அதேபோல பல கப்பல்களில் பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாகவும் அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறைப் பயணமாக கடந்த வாரம் உக்ரைனுக்கு சென்றிருந்தார். அதனைத் தொடர்ந்து உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கியைச் சந்தித்த பிரதமர் மோடி அமைதி திரும்ப இந்தியா உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தார். இந்த நிலையில் தற்போது உக்ரைனில் ரஷ்யா தாக்குதல் நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது