பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பாஜக முன்னாள் நிர்வாகி அஞ்சலையின்வங்கி கணக்கை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.
சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வீட்டின் அருகிலேயே பலரால் சூழப்பட்டு கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட செய்தி பரவியதும் நகரமே பதற்றத்திற்குள்ளானது. அதன் வீரியத்தை உணர்ந்த காவல்துறை துரிதமாக செயல்பட்டு தனிப்படைகளை ஜூலை 5 ஆம் தேதியே அமைத்து அன்றைய தினமே, கொலையாளிகள் பொன்னை பாலு, வழக்கறிஞர் அருள், திருவேங்கடம், திருமலை உள்ளிட்ட 11 பேரை சில மணி நேரங்களிலேயே கைது செய்தனர்.
அவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினர் கொலைக்கான சதிப்பின்னல் திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து வடசென்னை வரை நீண்டிருப்பதை அறிந்து அதிர்ந்தனர். தீவிர விசாரணையில் மற்றொரு அதிர்ச்சித் தகவலும் அவர்களுக்குக் கிடைத்தது. கொலையின் சதிப்பின்னல் தென்சென்னை வரை நீண்டதும். மேலும் இரண்டு பெண் தாதாக்களுக்கு கொலையில் தொடர்பு இருந்ததையும் அறிந்த காவல்துறையினரை மேலும் அதிர்ந்தனர்.
அதைத் தொடர்ந்து சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த வழக்கறிஞரும் அதிமுகவில் இருந்து தற்போது நீக்கப்பட்டவருமான பெண் தாதா மலர்க்கொடி மற்றும் மற்றொரு வழக்கறிஞர் ஹரிஹரன், திருநின்றவூரைச் சேர்ந்த அருளின் கூட்டாளியும் திமுக பிரமுகரின் மகனுமான சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அப்போது ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதானவர்களின் எண்ணிக்கை 14 ஆக அதிகரித்தது.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த பாஜக முன்னாள் நிர்வாகியான அஞ்சலை என்ற பெண் தாதா நேற்று கைது செய்யப்பட்டார். சென்னை ஓட்டேரியில் பதுங்கி இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். அவரிடம் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடைபெற்று வருகிறது.இந்நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக எவ்வளவு பணம் கைமாறியது என்பது குறித்து அஞ்சலையின் வங்கி கணக்கை காவல்துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர்.