இயக்குநர் அமீரிடம் தவெக கொடி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அவர் அளித்த பதில் குறித்து காணலாம்.
கெவி திரைப்படத்தின் சிறப்பு தொகுப்பு வெளியீட்டு விழா சென்னை நுங்கம்பாக்கத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் இயக்குநர் அமீர் மற்றும் திரைப்பட குழுவினர் கலந்து கொண்டனர். முன்னதாக இயக்குநர் அமீர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் தமிழக வெற்றி கழகம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அமீர்,
“அரசியல் களத்தில் யார் வருவதையும், யாராலும் தடுக்க முடியாது. அது காலத்தின் கட்டாயம். அதில் வெற்றி அடைவது அவருடைய கொள்கைகள் மற்றும் கட்சியின் நடைமுறைகளில் தான் உள்ளது. தவெக கொடி ஒரு சாதாரண கொடி மட்டும் தான். அதுகுறித்து விஜய் மாநாட்டில் தெரிவிக்கிறேன் என்று கூறியுள்ளார். அப்பொழுது தெரிந்து கொள்ளலாம். அது ஆப்பிரிக்க யானையா? இங்கிருந்து இறக்குமதி செய்யப்பட்ட யானையா? என்று கேள்வி எழுப்ப வேண்டாம்.
ஒரு கொடியினால் வாழ்க்கை திறமை மாறாது. கட்சியின் அடையாளம் தான் ஒரு கொடி. ஒரு கொடியில் ஆயிரம் அர்த்தங்கள் உள்ளன. சென்னையில் நடத்தப்படவுள்ள கார் பந்தயம் தமிழகத்திற்கு எப்படி பெருமை சேர்க்கிறதோ, அதுபோன்று வெள்ளியங்கிரி பகுதி மலைவாழ் மக்களுக்கு அரசு சாலைகளை மறுசீரமைப்பு செய்து தர வேண்டும்.
பெண்கள் மீது பாலியல் துன்புறுத்தல் உலகம் முழுவதும் காணப்படுகிறது. திரைத்துறையில் மட்டுமல்லாமல் எல்லா துறைகளிலும் வன்முறை நடைபெறுகிறது. மருத்துவமனையிலும் பாலியல் துன்புறுத்தல் உள்ளது. தொடர்ந்து அதிகரித்து வரும் பாலியல் துன்புறுத்தலை பார்த்தால் தான் மிகவும் பயமாக இருக்கிறது. ஆண்கள் சக பெண்களை பார்க்கும் போது அவர்களுடைய தாய் போல் கருத வேண்டும்.
அக்கா, தங்கை போன்று நினைக்கும் மனப்பான்மை வேண்டும். பெண்களை ஒரு போதைப் பொருளாக பார்ப்பது ஏற்க முடியாது. அது ஒரு ஆபத்தானது. சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை என்பது ஏற்க முடியாது. அதனை தடுக்க அரபு நாடுகளைப் போல சட்டங்களை கடுமையாக்க வேண்டும். பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டால் மரண தண்டனை தான் சரியான தீர்ப்பு”