நம் நாட்டில் ஏராளமான வேலை வாய்ப்புகள் உள்ள இன்றைய சூழலில் கலை, அறிவியல் மற்றும் வணிகவியல் துறைகளில் பட்டம் பெற்றவர்களுக்கும் வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கின்றன.
கூடுதல் திறன்கள்
வேலை பெறுவது இன்றைய காலகட்டத்தில் எளிதாக இருந்தாலும், ஒரு துறையில் உயரிய நிலைக்கு செல்ல வேண்டுமானால் கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம். முழு முயற்சியுடன் செயல்பட்டால் மட்டுமே வாழ்வில் சாதனை படைக்க முடியும். படிக்கும்போதே அவரவர் துறை சார்ந்த மற்றும் பிற துறைகள் சார்ந்த திறன் வளர்ப்பு பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கல்லூரி முடித்து செல்லும் போது ஒவ்வொரு மாணவரும் குறைந்தது ஐந்து கூடுதல் திறன் சான்றிதழ்களை பெற்றிருக்க வேண்டும்.
ஆகவேதான், எங்கள் கல்லூரியில் எம்.எஸ்.ஆபிஸ், டேட்டா அனலெட்டிக்ஸ், பைத்தான், டேலி, டுரோன் உட்பட பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறோம். ‘ஆர்ட்டிபிசியல் இன்டெலிஜென்ஸ்’ தாக்கம் அதிகரித்துவரும் நிலையில், அத்துறை சார்ந்த பயிற்சிகளையும் அதிகளவில் வழங்க உள்ளோம். கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ப்பில் தமிழக அரசின் ‘நான் முதல்வன்’ திட்டம் மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது என்றால் அது மிகையல்ல.
மேலும், கல்லூரியில் படிக்கும்போதே தொழில் நிறுவனங்களில் ‘இன்டர்ன்ஷிப்’ பயிற்சிகளை மேற்கொள்வதும் மிக அவசியம். செயல்முறை அனுபவம் வாயிலாக புரிந்து கற்றுக்கொள்வதுடன், மாணவர்களின் தன்னம்பிக்கை வளர்ப்பிலும் ‘இன்டர்ன்ஷிப்’ பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆதிக்கம் குறைவு
ஒரு படிப்பை தேர்வு செய்வதில் பெற்றோரின் ஆதிக்கம் சமீபகாலமாக பெருமளவு குறைந்து வருகிறது. எந்த படிப்பை படித்தால் என்ன வாய்ப்புகள் உள்ளது என்பதை இன்றைய மாணவர்கள் அறிந்துள்ளனர். என்றபோதிலும், தங்களது நண்பர்கள் சேர்க்கை பெறும் படிப்புகளிலேயே நாமும் சேர வேண்டிய அவசியமில்லை. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறமை இருக்கும்; அதேபோல், ஆர்வம் மற்றும் விருப்பம் நபருக்கு நபர் வேறுபடும். ஆகவே, அவரவர் திறமைக்கும், விருப்பத்திற்கும் ஏற்ப பாடப்பிரிவை தேர்வு செய்வதே சிறந்தது. பாடப்பிரிவை தேர்வு செய்வதில் யாருடைய ஆதிக்கமும் இருக்க கூடாது. முதுநிலை பட்டப்படிப்புகளையும், ஆராய்ச்சி படிப்புகளையும் ஆர்வத்துடன் மேற்கொள்ள வேண்டும்.
வாய்ப்புகள் பிரகாசம்
பாலிடெக்னிக் படிப்புகளுக்கான வாய்ப்புகள் மிகவும் பிரகாசமாக உள்ள நிலையில், இப்படிப்புகள் மீதான ஆர்வம் குறைந்து வருவது மிகவும் வருத்தத்திற்குரியது. டிப்ளமா படிக்கும் அனைவருக்கும் உடனடியாக வேலை கிடைக்கிறது. டிப்ளமா முடித்த மாணவர்களுக்கு பி.இ., பி.டெக்., படிக்கும் வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது.