ராமநாதபுரம்:
அரசு பள்ளிகளில் உள்ள ைஹடெக் லேப்களில் மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் இல்லம் தேடி கல்வியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாணவர்களுக்கு கணினி கற்பித்தல் பணி பாதிக்கப்பட்டுள்ளது என தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
ராமநாதபுரத்தில் இச்சங்க மாநில துணைத்தலைவர் ஏ.ஆரோக்கியசாமி கூறியதாவது:
மத்திய அரசின் நிதி உதவியுடன் தமிழகத்தில் 14 ஆயிரம் நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் ைஹடெக் லேப் அமைக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு ஒரு ஆய்வகத்திற்கு ரூ.6.40 லட்சம் மற்றும் கணினி பயிற்றுனரை நியமிக்க ஒரு பள்ளிக்கு ரூ.ஒரு லட்சத்து 80 ஆயிரம் ஓராண்டுக்கு மதிப்பூதியமாக வழங்குகிறது.
இந்நிதியை பயன்படுத்தி தமிழக அரசு மாநில பாடநுால் கழகத்தின் மூலம் கனிணி அறிவியல் பாடத்திற்கு என்று பாடத்திட்டம் உருவாக்கி பாடப்புத்தகம் தயார் செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கான செய்முறை தேர்வும் நடத்த வேண்டும். ஆசிரியர்கள் பணியிட பயிற்சிகளை மேற்கொள்ள ைஹடெக் லேப்புகளை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
ஆனால் இவற்றை தமிழக அரசு பின்பற்றவில்லை. மாறாக ைஹடெக் லேப்களில் மாணவர்களுக்கு கணினி கற்பிக்காமல் எமிஸ் பதிவேற்றம் போன்ற அலுவலகப் பணிகளை மேற்கொள்கின்றனர். 2008-09 உச்சநீதிமன்றம் கனிணி பயிற்றுவிக்கும் பணிக்கு கனிணி அறிவியல் பி.எட்., படித்தவர்களையே நியமிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
இவற்றை கருத்தில் கொள்ளாமல் முறையான கல்வித்தகுதி இல்லாத இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்களை நியமித்துள்ளனர். மத்திய அரசின் நிதியை பெறுவதற்காக உயர்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆய்வக உதவியாளர்களை ைஹடெக் லேப்களில் பணிபுரிய கட்டாயப்படுத்துகின்றனர்.
இதனால் 60 ஆயிரத்திற்கு மேற்பட்ட கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரிகள் வேலைவாய்ப்பு இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உச்சநீதிமன்றம் உத்தரவின்படி ைஹடெக் லேப்களில் பி.எட்., கணினி அறிவியல் பட்டதாரிகளை நியமிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.