தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை 2024: காலியிடங்களுக்கான துணைக் கலந்தாய்வுக்கு விண்ணப்பப் பதிவு ஆரம்பம்; இன்ஜினியரிங் படிப்புகளில் சேர கடைசி வாய்ப்பு
பி.இ, பி.டெக் போன்ற பொறியியல் படிப்புகளுக்கான துணை கலந்தாய்வுக்கு இன்று (ஆகஸ்ட் 28) முதல் விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான பொதுக் கலந்தாய்வு 3 சுற்றுகளாக நடைபெற்று முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து காலியாக உள்ள மீதி இடங்களில் ஏற்கனவே விண்ணப்பிக்காத மாணவர்களுக்கு வாய்ப்பு வழங்கவும், 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பொறியியல் படிப்பில் வாய்ப்பு வழங்கும் வகையிலும் துணை கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-25 கல்வி ஆண்டுக்கான பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு பொது கலந்தாய்வில் நிரப்பப்படாத இடங்களுக்கு 12 ஆம் வகுப்பு பொது மற்றும் தொழிற்கல்வி பயின்று சிறப்பு துணை தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் 2024 பொது கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாத மாணவர்கள் துணைக்கலந்தாய்வுக்கு இன்று முதல் செப்டம்பர் 4 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உள்ள மாணவர்கள் https://www.tneaonline.org (or) https://www.dte.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க இயலாத மாணவர்கள் தங்களின் விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க ஏதுவாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டுள்ளது. அந்த மையங்களின் விவரங்கள் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுப் பிரிவு, பி.சி, பி.சி.எம், எம்.பி.சி, பிரிவை சேர்ந்த மாணவர்களுக்கான பதிவு கட்டணம் ரூ.500-யாகவும், எஸ்.சி, எஸ்.சி.ஏ, எஸ்.டி பிரிவைச் சேர்ந்தவ மாணவர்களுக்கான பதிவு கட்டணம் ரூ.250-யாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் நிர்ணயம் செய்யப்பட்ட பதிவு கட்டணத்தை இணையதள வாயிலாக செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவ்வாறு இணையதளம் வாயிலாக பதிவு கட்டணத்தை செலுத்த இயலாத மாணவர்கள் வரைவோலையை பதிவு கட்டணமாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையம் வாயிலாக சமர்ப்பிக்கலாம்.
மாணவர்கள் இணையதளம் வாயிலாக தங்களுடைய விண்ணப்பத்தினை பதிவு செய்யும் பொழுது அசல் சான்றிதழ்களை இணையதளம் வாயிலாக சரிபார்க்கும் பொருட்டு தங்களுக்கு விருப்பமான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை சேவை மையத்தினை தேர்வு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்வு விவரங்கள் மற்றும் கால அட்டவணையை மாணவர்கள் இணையதளம் வாயிலாக தெரிந்து கொள்ளலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
இதனிடையே முதல் மற்றும் இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 8,308 இடங்களும், பொதுப்பிரிவில் 62,802 இடங்களும் என 71,110 இடங்கள் நிரம்பியுள்ளது. 3 ஆம் சுற்றுக் கலந்தாவிற்கான தற்காலிக ஒதுக்கீடு வெளியிடப்பட்டுள்ளது. அதில், பொதுப்பிரிவு மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான ஒதுக்கீட்டில் 63,843 பேருக்கு தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. தற்போது, ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 62,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடங்களை உறுதி செய்தால், ஒட்டுமொத்தமாக நிரம்பிய இடங்கள் 1,30,000ஐ தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.