சென்னை:
இன்ஜினியரிங் கல்லுாரிகளில், செமஸ்டர் தேர்வுக்கான தேர்வு கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்படுகிறது, என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.
தமிழகத்தில் இன்ஜினியரிங் கல்லுாரிகளில், செமஸ்டர் தேர்வுக்கான கட்டணம் உயர்த்தப்படுவதாத, உயர்கல்வி துறையில் இருந்து, நேற்று முன்தினம் தகவல் வெளியானது. கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் என, பல்வேறு அரசியல் கட்சிகளும் வலியுறுத்தின. மாணவர்கள் மற்றும் பெற்றோர் தரப்பிலும் கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், கட்டண உயர்வை தமிழக அரசு திரும்ப பெற்றுள்ளது.
சென்னை அண்ணா பல்கலையில், உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி நேற்று அளித்த பேட்டி:
அண்ணா பல்கலையில், பொறியியல் படிப்பு செமஸ்டர் தேர்வுக்கான தேர்வு கட்டணத்தை உயர்த்த, முந்தைய ஆண்டு சிண்டிகேட் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, அப்போதே நிறுத்தி வைப்பதாக அறிவித்தேன். ஓராண்டு முடிந்த நிலையில், இந்த ஆண்டு கட்டண உயர்வு அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், சில மாணவர்கள், கிராமங்களில் இருந்து வந்துள்ளோம். தேர்வு கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று கோரினர். அதன் அடிப்படையில், தேர்வு கட்டண உயர்வை, இந்த ஆண்டு மட்டுமல்ல, அடுத்த சிண்டிகேட்டில் அறிமுகம் செய்து நிறைவேற்றப்படும் வரை நிறுத்தி வைக்கிறோம்.
உயர்கல்வி வளர வேண்டும் என, முதல்வர் விரும்புகிறார். தேர்வு கட்டண உயர்வு மாணவர்களை பாதிக்கும் என்பதால், நிறுத்தி வைக்க உத்தரவிட்டார். தற்போதுள்ள கட்டணத்தை மாணவர்கள் செலுத்தினால் போதும்.
தன்னாட்சி கல்லுாரிகளுக்கு சில உரிமைகள் வழங்கப்பட்டுள்ளன. அந்த கல்லுாரிகளும், அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில் வசூலிக்கப்படும் கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என, ஆணை பிறப்பிக்க உள்ளோம்.