ரூ.21 கோடியில் அம்மா உணவகங்கள் மேம்பாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

ரூ.21 கோடி மதிப்பீட்டில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பொறுப்பேற்றது.  அப்போது கொண்டு வரப்பட்ட திட்டங்களில் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது  “அம்மா உணவகம்”.  அதிமுக ஆட்சியிலும்,  கொரோனா,  புயல்,  வெள்ளம் காலகட்டத்திலும் அம்மா உணவகங்கள் பொதுமக்களுக்கு மிகப்பெரிய அளவில் கைகொடுத்தன.

இதனிடையே 10 ஆண்டுகால அதிமுக ஆட்சிக்குப் பின் 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்று முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார்.  இந்நிலையில்,  ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர்,  முன்னதாக செயல்பட்டு வந்த அம்மா உணவகம் வழக்கம் போல இயங்குமா என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் அம்மா உணவகம் தொடர்ந்து செயல்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.  இது மக்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த சூழலில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அம்மா உணவகத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்று பார்வையிட்டார். அங்கு பொதுமக்களுக்கு வழங்கப்படும் உணவின் அளவு, தரம், சுவை ஆகியவை குறித்து அவர் ஆய்வு மேற்கொண்டார்.

உணவு தயாரிப்பு முறைகள் குறித்து ஊழியர்களிடம் கேட்டறிந்த முதலமைச்சர் ஸ்டாலின், பொதுமக்களிடமும் உணவின் தரம் குறித்து விசாரித்தார். அம்மா உணவகத்தில் முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டபோது மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

இதனையடுத்து, சமையலறை, உணவுக் கூடத்தை தூய்மையாக பராமரிக்கவும், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், சுவையான தரமான உணவை தயாரித்து வழங்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுரை வழங்கினார்.

மேலும், ரூ.21 கோடி மதிப்பீட்டில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.  அம்மா உணவகங்களை அவ்வப்போது நேரில் ஆய்வுசெய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *