பணியிடங்களில் ஆண்களை விட, பெண்கள் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாக ஆய்வு ஒன்று கூறியுள்ளது.
இந்தியாவின் மனம் மற்றும் உணர்ச்சி பயிற்சி நிறுவனங்களில் ஒன்றான ‘யுவர் டோஸ்ட்’ நடத்திய ஆய்வில், ஆண்களைவிட பெண்கள்தான் அதிக மன அழுத்தத்திற்கு ஆளாவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 5000-க்கும் மேற்பட்ட ஊழியர்களிடையே நடத்தப்பட்ட ஆய்வில் இந்த தகவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஆண்களில் சுமார் 53.6% பேரும், பெண்களில் 72.2% பேரும் அதிக மன அழுத்தத்தில் இருப்பதாகப் புகாரளித்துள்ளனர். பெண்கள் பலரும் வேலை நிறுவனங்களில் உள்ள பணிச்சுமை மற்றும் வீட்டில் உள்ள பணிச்சுமை காரணங்களால் அதிகளவில் மன அழுத்தமடைந்துள்ளனர்.
இதில் 21 முதல் 30 வயதிற்குட்பட்டவர்கள் மிக அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும், அதற்கு அடுத்ததாக 30 முதல் 40 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், பின்னர் 41 முதல் 50 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளது.
தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், உற்பத்தி மற்றும் ஊடகம் உள்ளிட்ட பல முக்கியத் துறைகளில் பணிபுரியும் ஊழியர்களிடம் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 5ல் 3 பங்கு ஊழியர்கள் தீவிர மன அழுத்தத்தை அனுபவிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.