அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி விண்ணப்ப விநியோகம் தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககம் 2023-24ம் ஆண்டிற்கான மாணவர்கள் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவ விநியோகத் தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தொலைதூரக்கல்வி இயக்ககம், இயக்குநர் சி.சந்தோஷ்குமார் வரவேற்றார். பல்கலைக்கழக துணைவேந்தர் ராம.கதிரேசன் விழாவில் குத்துவிளக்கு ஏற்றி வைத்து, மாணவர்களுக்கு முதல் விண்ணப்பத்தை வழங்கி விநியோகத்தைத் தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து துணைவேந்தர் செய்தியாளர்களிடையே பேசுகையில், “புகழ்பெற்ற அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக்கல்வி இயக்ககம் 2012-ல் பல்கலைக்கழக மானியக்குழுவின் தொலைதூரக்கல்வி வழிகாட்டுதல் குழு மேற்பார்வையில் இயங்கி வந்து கொண்டிருந்தது. 2015-ல் யுஜிசி அதிகாரிகள், பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி பாடத் திட்டங்கள் ஏற்புடையது அல்ல என்ற அறிவிப்பு வெளியிட்டதின் பேரில் 2015-லிருந்து தொலைதூரக்கல்வி படிப்புகளுக்கு தடை பெற்றிருந்தாலும் கூட நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் தொடர்ந்து அனுமதி பெற்று சேர்க்கை நடைபெற்று வந்தது.

2022-ல் யுஜிசி படிப்புகளைத் தொடரக்கூடாது என உறுதியான ஒரு அறிக்கையை வழங்கியது. இதனால் 2022-23க்கான கல்விச் சேர்க்கையை நிறுத்தி வைத்திருந்தோம். பின்னர், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் படி 2015-ல் இருந்து 2021 வரை சேர்ந்து பயின்ற மாணவர்களின் நலன் பாதுகாக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டு 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்த தொலைதூரக்கல்வி இயக்ககம் படிப்புகளுக்கு அனுமதி பெறுவதற்காக, பல்கலைக்கழக மானியக்குழுவின் வழிகாட்டுதல் குழுவிற்கு நாங்கள் விண்ணப்பித்திருந்தோம்.

அந்த வகையில் சென்ற மாதம் வழிகாட்டுதல் குழு ஆய்வு செய்து தற்போது 2023 முதல் 27 பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்புகள் தொடங்க அனுமதி வழங்கியுள்ளன. மேலும் பட்டயம் மற்றும் சான்றிதழ் படிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழு ஒப்புதல் வேண்டியதில்லை என்பதால், சுமார் 125 பாடப்பிரிவுகளுக்கு பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்கம் இந்த ஆண்டு முதல் சேர்க்கையைத் தொடங்கியுள்ளது. 125 படிப்புகளில் 27 பட்டப்படிப்பு மற்றும் பட்ட மேற்படிப்புகளுக்கு அனுமதி பெற்று நடத்தப்படுகிறது.

98 சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புகள் பல்கலைக்கழகம் முன்வந்து அறிமுகப்படுத்தியுள்ளது. ஆக. 4-ந் தேதி முதல் பல்கலைக்கழகப் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விநியோகம் செய்யப்படுகிறது. அடுத்த வாரத்திலிருந்து பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து தொலைதூரக்கல்வி இயக்கப் படிப்புகளுக்கான விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

தொலைதூரக்கல்வி இயக்ககத்தில் பி.எட்., பட்டப் படிப்பு தொடங்க இந்த ஆண்டு என்.சி.டி.இ. அனுமதி வேண்டியுள்ளதால், இந்த ஆண்டு விண்ணப்பித்து அடுத்தடுத்த ஆண்டுகளில் முறையான அனுமதி பெற்றுத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பிளஸ்டூ முடித்தவர்கள் 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த பட்டப் படிப்புகள் தொடங்க வாய்ப்பு உள்ளதால், அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் மொத்தம் 55 படிப்பு மையங்களில் விண்ணப்பங்களைப் பெறலாம். மாணவர்கள் விண்ணப்பிக்கக் கடைசி தேதி செப்டம்பர் 30-ம் தேதி” என அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *