சென்னை:மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யில் ஒவ்வொரு ஆறாவது நாளும், ஒரு புத்தொழில் நிறுவனம் துவங்கப்படுவதாக அதன் இயக்குனர் காமகோடி தெரிவித்து உள்ளார்.
மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யின் 61வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற ஐ.ஐ.டி., இயக்குனர் காமகோடி தெரிவித்ததாவது:
இங்கு ஒவ்வொரு ஆறாவது நாளும், ஒரு புத்தொழில் நிறுவனம் துவங்கப்படுகிறது. அடுத்து வரும் ஆண்டுகளில், ஒவ்வொரு மூன்றாவது நாளும் ஒரு புத்தொழில் நிறுவனம் துவங்கப்பட வேண்டும்.
கடந்த நிதியாண்டில் மொத்தம், 100 நிறுவனங்களை துவங்க இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், 60 நிறுவனங்களை துவங்கியுள்ளோம்.
மெட்ராஸ் ஐ.ஐ.டி.,யின் 365 புத்தொழில் நிறுவனங்களின் மொத்த மதிப்பு 45,000 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இந்நிறுவனங்களின் வருவாய் 3,600 கோடி ரூபாய். துணிகர முதலீட்டாளர்கள் இவற்றில் 10,662 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளனர். இந்நிறுவனங்கள் வாயிலாக 10,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. 210 காப்புரிமைகள் பெறப்பட்டுள்ளன.
ஒரு நாளுக்கு, ஒரு காப்புரிமை வீதம் தாக்கல் செய்யவேண்டும் என இலக்கு நிர்ணயித்திருந்த நிலையில், கடந்த நிதியாண்டில் இந்த இலக்கை கடந்து, மொத்தம் 419 காப்புரிமைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
கடந்த நிதியாண்டில், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்காக ஐ.ஐ.டி.,க்கு மொத்தம் 2,454 கோடி ரூபாய் நிதி வழங்கப்பட்டது.
இவ்வாறு தெரிவித்தார்.