மும்பை:கார்ப்பரேட் நிறுவனங்கள், வங்கிகள் துவங்குவதை அனுமதிக்கும் எந்த ஒரு திட்டமும் ரிசர்வ் வங்கிக்கு இல்லை என, அதன் கவர்னர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், இவ்வாறு தெரிவித்தார்,
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது:
கார்ப்பரேட் நிறுவனங்களை வங்கிகள் நடத்த அனுமதிப்பது ஒரு முரண்பாடான முடிவாக இருக்கும். இந்நிறுவனங்கள் தங்களது நலன் சார்ந்து, தங்களுக்கு வேண்டப்பட்டவர்களுக்காக மட்டுமே இயங்கும் வாய்ப்புகள் அதிகம்.
உலகளவில் இதுதொடர்பாக மேற்கொள்ளப்பட்ட பல முயற்சிகள், இதுபோன்ற பிரச்னைகள் இருப்பதை நிரூபித்து உள்ளன.
அதனால், இப்போதைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி எதுவும் பரிசீலிக்கவில்லை.
கார்ப்பரேட் நிறுவனங்களை கண்காணிப்பதும், ஒழுங்குபடுத்துவதும் மிகவும் கடினமான செயலாகும். இதில் உள்ள ஆபத்துகளும் அதிகம். மற்ற வணிகங்களைக் காட்டிலும் வங்கிகளின் செயல்பாடுகள் வித்தியாசமானது.
நாட்டின் பொருளாதாரம் வளர போதுமான வளங்கள் தேவை என்றாலும், வங்கிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமே அதற்கு தீர்வாகாது.
எண்ணிக்கையை காட்டிலும், வளமான, வலுவான மற்றும் சிறப்பாக நிர்வகிக்கப்படும் வங்கிகளே நாட்டின் முன்னேற்றத்திற்கு அவசியம்.
வங்கிகளுக்கான உரிமம் வழங்குவது எளிதாக்கப்பட்டுள்ளது. பலதரப்பட்ட சேவைகளை வழங்க உரிமம் பெற விரும்பும் வங்கி கள், ரிசர்வ் வங்கியிடம் விண்ணப்பித்து, உரிமம் பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு தெரிவித்தார்.
கார்ப்பரேட் நிறுவனங்களை கண்காணிப்பதும், ஒழுங்குபடுத்துவதும் மிகவும் கடினமான செயலாகும்