கொலை வழக்கில் சிக்கிய நடிகர் #darshan | சிறையில் சொகுசு வாழ்க்கை! – வைரலாகும் புகைப்படம்…

நடிகர் தர்ஷன் சிறை வளாகத்துக்குள் கையில் சிகரெட் மற்றும் காப்பி குவளையுடன் தனது மேலாளர் மற்றும் இரண்டு சிறை நண்பர்களுடன் சொகுசாக சேர் போட்டு அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கொலை வழக்கில் நீதிமன்றக் காவலில் உள்ள பிரபல கன்னட நடிகர் தர்ஷன் தூகுதீபா, சிறையில் மூன்று பேருடன் அமைந்து சிகரெட் பிடிக்கும் புகைப்படம் வெளியாகி அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த புகைப்படம் எப்போது எடுக்கப்பட்டது என்பதற்கான எந்தவித ஆதாரமும் இல்லை. சுற்றிலும் புல் நிறைந்த ஒரு பெரிய திறந்தவெளியில் பிளாஸ்டிக் நாற்காலிகளில் அமர்ந்து, மூன்று பேருடன் தர்ஷன் ஜாலியாக அரட்டை அடிப்பது போல் இந்த புகைப்படத்தை பார்க்கும் போது உள்ளது. பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள தர்ஷனுக்கு எப்படி சிகரெட், டீ போன்ற சகல வசதிகள் கிடைக்கிறது என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தர்ஷனுக்கு அருகில் கேங்க்ஸ்டர் வில்சன் கார்டன் நாகா, நாகராஜ் (தர்ஷனின் மேலாளர் மற்றும் சக குற்றவாளி) மற்றும் குல்லா சீனா ஆகியோர் அமர்ந்து உள்ளனர். வெளியான புகைப்படத்தில் அவர்கள் எதையோ பார்த்து சிரிப்பது போல தெரிகிறது. பெங்களூருவில் உள்ள ஒரு மேம்பாலம் அருகே 33 வயதான ரேணுகாசுவாமி என்ற ஆட்டோ ஓட்டுனர் கடந்த ஜூன் 9ஆம் தேதி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார். காவல்துறையின் தீவிர விசாரணையில், நடிகர் தர்ஷனுடன் கிசுகிசுவில் சிக்கிய நடிகை பவித்திராவிற்கு இந்த ரேணுகாசாமி என்பவர் ஆபாச செய்திகளை அனுப்பியதாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த தர்ஷன் ரேணுகாசாமியை கடத்தி கொலை செய்துள்ளார் என்றும் கூறப்பட்டது.

இதனை தொடர்ந்து தர்ஷன், பவித்ரா கவுடா மற்றும் இந்த கொலையில் சம்பந்தப்பட்ட மேலும் 15 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஆகஸ்ட் 21ம் தேதி பெங்களூரு நீதிமன்றம் தர்ஷன், பவித்ரா மற்றும் உடன் இருப்பவர்களின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 28 வரை நீட்டித்தது. இந்நிலையில் கைது செய்யப்பட்ட தர்ஷன் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சிறையில் சகல வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்ற சந்தேகத்தை இந்த படத்தை பார்க்கும் போது அனைவருக்கும் எழுகிறது. இந்நிலையில் இறந்த ரேணுகாசாமியின் தந்தை சிவ கவுடா, இந்த புகைப்படம் தொடர்பான தீவிர விசாரணை எடுக்கப்பட வேண்டும் என்று மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

“தர்ஷன் வீட்டில் சமைத்த உணவை கேட்டபோது, ​​அதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை. காவல்துறை மற்றும் நீதித்துறையின் மீது எங்களுக்கு இன்னும் அதிக நம்பிக்கை உள்ளது. இது போன்ற சம்பவங்கள் நடப்பது ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தருகிறது. இது குறித்து முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறேன். இந்த படத்தை பார்க்கும்போது தர்ஷன் மற்றவர்களுடன் சிகரெட் பிடித்து டீ குடிப்பது தெரிகிறது. அவர் சிறையில் இருக்கிறாரா அல்லது பிகினிக்கில் இருக்கிறாரா என்ற சந்தேகம் வருகிறது. சிறைச்சாலையில் அவருக்கு ராஜ மரியாதை கொடுக்கப்படுவது தெரிகிறது. எனது மகனை இழந்த வலி எனக்கு தெரியும். எங்கள் குடும்பம் மிகுந்த வேதனையில் உள்ளது. சிபிஐ விசாரணை நடத்தி அதன் பின்னணியில் உள்ளவர்களைத் தண்டிக்க வேண்டும்” என்று கவுடா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *