அமெரிக்கா சென்றுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் அமெரிக்க வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில், முதலீட்டாளர்களை சந்திப்பதற்காக 17 நாட்கள் பயணமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா சென்றுள்ளார். நேற்று முன்தினம் (27ம் தேதி) இரவு சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துபாய் வழியாக இன்று (29ம் தேதி) அதிகாலை அமெரிக்கா சென்றடைந்தார். உயர்தர வேலைவாய்ப்பு மற்றும் உயர்தர முதலீடு ஆகியவையே இந்த பயணத்தின் நோக்கம் என தமிழ்நாடு தொழில் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பூங்கொத்து கொடுத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “Eagle has landed” என்று புகழாரம் சூட்டி பதிவிட்டுள்ளார். சான்பிரான்சிஸ்கோ விமானநிலையத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா மற்றும் அமெரிக்கவாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சான்பிரான்சிஸ்கோவில் இன்று நடக்கும் முதலீட்டாளர்கள் சந்திப்பில் முதலமைச்சர் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.
பின்னர், ஆகஸ்ட் 31-ம் தேதி புலம் பெயர் தமிழர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசுகிறார். செப்டம்பர் 2-ம் தேதி சிகாகோவில் உள்ள சர்வதேச முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து முதலமைச்சர் பேசுகிறார். செப்டம்பர் 7-ம் தேதி அமெரிக்காவில் உள்ள அயலக தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு செப்டம்பர் 14-ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.