தனது பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் ஜியு-ஜிட்சுவின் (ஒரு வகை தற்காப்புக் கலை) காட்சிகளைப் பகிர்ந்து கொண்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வியாழக்கிழமை ‘பாரத் டோஜோ யாத்ரா’ நடைபெறலாம் என்று சூசகமாகத் தெரிவித்தார்.
டோஜோ என்பது மாணவர்கள் பல்வேறு வகையான தற்காப்பு கலைகளை மேற்கொள்ளும் பள்ளியைக் குறிக்கிறது.
ஜியு-ஜிட்சு பயிற்சியின்போது பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் அதிகம் அறியப்படாத அம்சம் குறித்த வீடியோவை ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். “உடற்தகுதியுடன் இருப்பதற்கு ஒரு எளிய வழியாகத் தொடங்கியவை, நாங்கள் தங்கியிருந்த நகரங்களைச் சேர்ந்த சக யாத்ரீகர்கள் மற்றும் இளம் தற்காப்புக் கலை மாணவர்களை ஒன்றிணைக்கும் ஒரு சமூக நடவடிக்கையாக விரைவாக பரிணமித்தது” என்று பதிவு கூறியது.
தியானம், ஜியு-ஜிட்சு, ஐகிடோ மற்றும் வன்முறையற்ற மோதல்களைத் தீர்க்கும் நுட்பங்களின் இணக்கமான கலவையான ‘மென்மையான கலை’-க்கு இளம் சிறார்களுக்கு அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தை ராகுல் வலியுறுத்தினார்.
மேலும், “வன்முறையை மென்மையாக மாற்றுவதன் மதிப்பை அவர்களிடம் விதைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளோம், இரக்கமுள்ள மற்றும் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்குவதற்கான கருவிகளை அவர்களுக்கு வழங்குகிறோம்” என்று ராகுல் காந்தி பகிர்ந்து கொண்டார்.
“இந்த தேசிய விளையாட்டு தினத்தில், உங்களில் சிலரை ‘ஜென்டில் ஆர்ட்’ பயிற்சியை மேற்கொள்ள ஊக்குவிக்கும் நம்பிக்கையில், எங்கள் அனுபவத்தை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்” என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
இந்த பதிவின் முடிவில், “பி.எஸ்: பாரத் டோஜோ யாத்திரை விரைவில் வருகிறது” என்று ராகுல் காந்தி எழுதியுள்ளார்.