அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, “அசாம் மாநிலத்தை மியா முஸ்லிம்கள் கைப்பற்ற அனுமதிக்க மாட்டோம்” என்று சர்ச்சைச்குரிய வகையில் பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஹிமந்தா பிஸ்வா சர்மா மதம் மற்றும் இனத்தின் அடிப்படையில் இரண்டு வகுப்பினருக்கு இடையே பகை ஏற்படுத்தும் வகையில் பேசுவதாக கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.
குவஹாத்தி கிழக்கு டிசிபி மிருணாள் தேகா, திஸ்பூர் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டதாகவும், இதுபற்றி புதன்கிழமை மாலை வரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்றும் உறுதிப்படுத்தினார்.
மாநிலத்தில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளை எதிர்க்கும் பல்வேறு அமைப்புகளின் ஒருங்கிணைந்த அமைப்பான ஒருங்கிணைந்த எதிர்க்கட்சி மன்றத்தின் சார்பில் அசாம் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பூபென் போரா மற்றும் அஸ்ஸாம் ஜதியா பரிஷத் லுரின்ஜோதி கோகோய் ஆகியோர் காவல்துறையில் புகார் அளித்தனர்.
சுயேட்சை ராஜ்யசபா எம்.பி அஜித் புயான், அசாம் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தேபப்ரதா சைகியா, காங்கிரஸின் துப்ரி எம்பி ரகிபுல் ஹுசைன் ஆகியோரும் புகார் அளிக்கச் சென்ற தலைவர்களில் அடங்குவர்.
ஆகஸ்ட் 22 அன்று நாகோன் மாவட்டத்தில் 14 வயது சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், அசாமின் பல பகுதிகளில் பல்வேறு சமூகங்களுக்கு இடையே பதட்டமான சூழல் இருந்து வருகிறது. இதற்கு மத்தியில் சர்மா இவ்வாறு கூறியுள்ளார்.
சர்மா மற்றும் அவரது அமைச்சர்கள் பலரும் இந்த சம்பவத்தை குறிப்பிட்டு பெங்காலி-முஸ்லிம்கள் மீது ஆதாரமில்லாத குற்றச்சாட்டையும் கூறி வருகின்றனர்.
புகார் மனுவில், ஹிமந்தா பிஸ்வா சர்மா மற்றும் பிற பாஜக தலைவர்கள் பேச்சு மாநிலத்தில் கலவரம் ஏற்படுத்தும் சூழலையும், அமைதியின்மையை உருவாக்கும் குற்றவியல் சதியையும் தூண்டும் வகையில் பேசுகின்றனர். சர்மா, எப்போதும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தை குறிவைத்து தொடர்ந்து சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசுபவர் என்று கூறற்பட்டுள்ளது.
“மியா” என்பது பெங்காலி-முஸ்லிம்களை குறிவைத்து சொல்லப்படும் இழிவான சொல். எதிர்க்கட்சி புகாரில் கடந்த வாரம் நடந்த சம்பவமும் குறிப்பிடப்பட்டுள்ளது, அதில் முதல்வர் ஒரு நிருபரை அவரது மத அடையாளம் குறித்து ஸ்வைப் செய்துள்ளார்.