மணிப்பூரில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், நிலைமையை கட்டுப்படுத்த தெலங்கானா, ஜார்கண்டில் இருந்து 2000 துணை ராணுவ வீரர்களை மத்திய அரசு சுரச்சந்த்பூர் மற்றும் இம்பாலுக்கு அனுப்பி உள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, மணிப்பூரில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த இரண்டு அசாம் ரைபிள் பட்டாலியன் படைகள் விலக்கப்பட்டன. அந்த படைகள் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கின் வேறு சில பகுதிகளுக்கு வேறு அரசுப் பணிகளுக்கு அனுப்பட்டன.
இதையடுத்து, தெலங்கானா, ஜார்கண்டில் இருந்து 2000 துணை ராணுவ வீரர்கள் சுரச்சந்த்பூர் மற்றும் இம்பாலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று ஒரு அதிகாரி கூறினார். ஒரு படைகள் அதன் தலைமையகம் கங்வாயில் (சுராசந்த்பூர்) இருக்கும். மற்றொரு படை இம்பாலைச் சுற்றி நிறுத்தப்படும் என்றார்.
கடந்த ஆண்டு இரு பிரிவுகளுக்கு இடையே ஏற்பட்ட வன்முறையைத் தொடர்ந்து மாநிலத்தில் ஏற்கனவே இருக்கும் 16 படைப்பிரிவுகள், கடந்த வாரம் இம்பால் மேற்கு, இம்பால் கிழக்கு, சுராசந்த்பூர், நோனி, ஜிரிபாம், காங்போக்பி, பிஷ்ணுபூர் ஆகிய இடங்களில் தங்கள் செயல்பாட்டுத் தளங்களை நிறுவின.
தற்போது அனுப்பபட்டுள்ள படைகளுடன் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தும் துப்பாக்கிகள், ட்ரோன், ஆளில்லா வான்வழி இயந்திரங்களை செயல்படவிடாமல் தடுக்கும் நவீன தொழில்நுட்ப கருவிகளும் மணிப்பூருக்கு அனுப்பப்பட உள்ளன. மேலும் மாநிலம் முழுவதும் 5 நாட்களுக்கு இணைய சேவைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.