‘கொலம்பஸ் இல்லை; எங்க முன்னோர்கள் தான் அமெரிக்காவை கண்டுபிடிச்சாங்க’: ம.பி கல்வி அமைச்சர் பேச்சு

மத்தியப் பிரதேசத்தில் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநில உயர்கல்வி அமைச்சராக இருப்பவர் இந்தர் சிங் பர்மர். இவர் நேற்று செவ்வாய்க்கிழமை போபாலில் உள்ள பர்கத்துல்லா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றார். இந்த விழாவில் அம்மாநில கவர்னர் மங்குபாய் சி படேல் மற்றும் முதல்வர் மோகன் யாதவ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் அமைச்சர் இந்தர் சிங் பர்மர், இந்திய மாலுமி ஒருவர் தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்றும், ராமர் சிலைகளை உருவாக்கிய இந்திய கட்டிடக் கலைஞரின் உதவியுடன் பெய்ஜிங் நகரம் வடிவமைக்கப்பட்டது என்றும், ரிக்வேதத்தை எழுதியவர்கள் தான் பூமி சூரியனைச் சுற்றி வருகிறது என்று முதலில் கணித்தது எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும், வரலாற்றாளர்கள் திட்டமிட்ட முறையில் இந்தியாவின் பலத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளனர் என்றும், “தவறான உண்மைகள் காரணமாக, இந்தியாவின் எதிர்மறையான பிம்பம் உலகிற்கு முன்வைக்கப்பட்டது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் பேசுகையில், “நமது முன்னோர்கள் அறிவு, திறமை மற்றும் திறன் ஆகிய அனைத்து அம்சங்களிலும் முன்னேறியவர்கள். நாம் தாழ்வு மனப்பான்மையிலிருந்து விடுபட்டு, உயர்ந்த எண்ணங்களைத் தழுவி முன்னேற முயல வேண்டும்.

கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார் என்பது இந்தியாவில் தேவையில்லாமல் கற்பிக்கப்படும் ஒரு பொய். இது இந்திய மாணவர்களுக்குப் பொருத்தமற்றது. இதைக் கற்பிக்கப் போகிறார்களானால், கொலம்பஸுக்குப் பின் வந்தவர்கள் செய்த அட்டூழியங்கள், இயற்கையை வணங்குபவர்கள், சூரியனை வணங்குபவர்கள் என்று பழங்குடியின சமூகங்களை எப்படி அழித்தார்கள், படுகொலை செய்யப்பட்டு மதமாற்றம் செய்யப்பட்டார்கள் என்பதையும் கற்பித்திருக்க வேண்டும்.

ஒரு இந்திய மாலுமி 8 ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவிற்குச் சென்று சான் டியாகோவில் பல கோயில்களைக் கட்டினார். அவை இன்னும் அங்குள்ள அருங்காட்சியகத்தில் ஆவணப்படுத்தப்பட்டு நூலகங்களில் பாதுகாக்கப்பட்டுள்ளன.

நாங்கள் அங்கு சென்றபோது, ​​அவர்களின் கலாச்சாரத்தை, மாயா நாகரீகத்தை அதனுடன் ஒருங்கிணைத்து வளர்க்க உதவினோம். இவை மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டிய இந்தியாவின் சிந்தனை முறை மற்றும் தத்துவம். ஏதாவது கற்பிக்கப்பட வேண்டும் என்றால், அதை சரியாகக் கற்பித்திருக்க வேண்டும். எனவே, நம் முன்னோர்கள் தான் அமெரிக்காவைக் கண்டுபிடித்தார்கள், கொலம்பஸ் அல்ல.

வாஸ்கோடகாமா சாந்தனின் கப்பல் தனது கப்பலை விட பெரியது எழுதியிருக்கிறார். கொஞ்சம் பெரியது மட்டுமல்ல, அவருடைய கப்பலை விட இரண்டு முதல் நான்கு மடங்கு பெரியது என்று குறிப்பிட்டுள்ளார். வாஸ்கோடகாமா இந்திய வர்த்தகரான சந்தனைப் பின்தொடர்ந்து இந்தியாவிற்கு வந்துளார். ஆனால், இந்தியாவிற்கு கடல் வழியைக் கண்டுபிடித்தவர் வாஸ்கோடகாமா என்று வரலாற்றாசிரியர்கள் இந்திய மாணவர்களுக்கு தவறாகக் கற்பிகிறார்கள்.

ஏறக்குறைய 1,200-1,300 ஆண்டுகளாக, புவியியல் தவறான கருத்துகளின் அடிப்படையில் ஒரு குறிப்பிடத்தக்க பொய் உலகம் முழுவதும் நிலைத்திருக்கிறது. போலந்து வானியலாளர் கோபர்நிக்கஸின் கோட்பாடு சூரியன் நிலையானது. கலிலியோ சொன்னது சூரியன் நிலையானது மற்றும் பூமி உட்பட அனைத்து கிரகங்களும் அதைச் சுற்றி வருகின்றன. ஆனால், இது நமது பண்டைய நூல்களில் ஏற்கனவே கூறப்பட்டுள்ளன.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ரிக்வேதத்தை எழுதியவர்கள், சந்திரன் தனது தாய் கிரகமான பூமியைச் சுற்றி வருவதாகவும், பூமி அதன் பெற்றோரான சூரியனைச் சுற்றி வருவதாகவும் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளனர். அதாவது, நமது முன்னோர்கள் ஏற்கனவே சூரியனை நிலையானதாகக் கருதினர். பூமி, சந்திரன் மற்றும் மற்ற அனைத்து கிரகங்களும் அதைச் சுற்றி வருகின்றன.

சுவாரஸ்யமான வரலாற்று உண்மையை என்னவென்றால், 12 ஆம் நூற்றாண்டில், பெய்ஜிங் நகரம் நிறுவப்பட்டபோது, ​​அதன் வடிவமைப்புகளும் கட்டிடக்கலைகளும் இன்றைய நேபாளத்திலிருந்து ஒரு கட்டிடக் கலைஞரால் உருவாக்கப்பட்டது, ஆனால், அது அப்போது இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்தது.

பால் பாஹு என்று பெயரிடப்பட்ட இந்த கட்டிடக் கலைஞர், புத்தர் மற்றும் ராமர் சிலைகளை உருவாக்குவதிலும், பிரமாண்டமான கட்டிடங்களை வடிவமைப்பதிலும் பெயர் பெற்றவர். பெய்ஜிங்கை வடிவமைக்க அவர் அழைக்கப்பட்டார். இன்றும் கூட, பால் பாகுவின் பங்களிப்புகளை அங்கீகரித்து, அரசாங்கத்தால் பெய்ஜிங்கில் அவருக்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது.

ஒலிம்பிக்கள் சுமார் 2,800 ஆண்டுகளாக, மைதானங்கள் மற்றும் கூட்டு விளையாட்டுகள் என்ற கருத்தை வளர்த்து வரும் நிலையில், நம் நாட்டில் இன்னும் பழமையான மைதானங்களின் சான்றுகள் உள்ளன. குஜராத்தில் உள்ள ரான் ஆஃப் கட்ச் என்ற இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சியில், 2,800 அல்லது 3,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த அரங்கங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. நமது முன்னோர்கள் ஏற்கனவே விளையாட்டில் பரிச்சயமானவர்களாக இருந்ததையும், அரங்கங்களை உருவாக்க முடியும் என்பதையும் இது காட்டுகிறது.” என்று அமைச்சர் இந்தர் சிங் பர்மர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *