‘நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை’: நிர்மலா சீதாராமனிடம் வருத்தம் தெரிவித்த சீனிவாசன்

கோவை கொடிசியா வர்த்தக வளாகத்தில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், தொழில் துறையினர் சந்திப்பு நிகழ்வு செவ்வாய்க் கிழமை (செப்.11) நடந்தது.

அப்போது கோவையின் பிரபல அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன்,  ஜிஎஸ்டி வரியில் உள்ள சிக்கல் குறித்து நிர்மலா சீதாராமனிடம் சில கோரிக்கைகளை முன்வைத்தார்.

” இனிப்புக்கும், காரத்துக்கும் வேறு வேறு ஜிஎஸ்டி உள்ளது. பன்னுக்கு வரி இல்லை. ஆனால், அதில் க்ரீம் கலந்தால் 18 சதவிகிதம் ஜிஎஸ் டி ஆகிவிடுகிறது. இதனால் கம்ப்யூட்டரே திணறுகிறது” என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதனை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அதிகமாக பகிர்ந்து நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்தனர்.

இதற்கு விளக்கமளித்த நிர்மலா சீதாராமன், ’ஹோட்டல் உரிமையாளர் தங்களின் பிரச்னையை ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். அதில் தவறில்லை. அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார். ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. அவர்களின் பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். விமர்சனங்களைப் பற்றி கவலை இல்லை. அவரது கோரிக்கை பரிசீலனை செய்யப்படும்’, என்றார்.

இந்நிலையில் அன்னபூர்ணா ஹோட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன்,  நிர்மலா சீதாராமனை நேற்று சந்தித்து, தனது பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தி விட்டதாக வருத்தம் தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் நிர்மலா சீதாராமன், வானதி சீனிவாசன் மற்றும் அன்னபூர்ணா சீனிவாசன் மட்டும் இருந்தனர்.

அப்போது சீனிவாசன், ‘சங்கத்தில் விவாதித்த விஷயங்களை தான் பேசினேன். நான் எந்த அரசியல் கட்சியையும் சேர்ந்தவன் இல்லை. தவறாக பேசியிருந்தால்  மன்னிக்கவும். தமிழகத்தில் சிறிய கடை, பெரிய கடை அல்லது ஸ்டார் ஹோட்டல்கள், தெருவோர கடைகள் உள்ளிட்ட அனைவரையும் சேர்த்து ஒரு கூட்டம், நீங்கள் நடத்த வேண்டும்’ என்றார்

ஆனால் இந்த சந்திப்பு குறித்து பாஜக தரப்பிலோ அல்லது அன்னபூர்ணா உணவகம் தரப்பிலோ அதிகாரபூர்வாக எந்த அறிவிப்பும் கொடுக்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *