சாதனை பயணம்.. ரூ.7,616 கோடிக்கு முதலீடு; இது எனக்கான வெற்றி அல்ல- அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய ஸ்டாலின் பேட்டி

தமிழகத்துக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி இரவு அரசுமுறை பயணமாக அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சான் பிரான்சிஸ்கோ, சிகாகோவில் முதலீட்டாளர்களை சந்தித்து, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.

கடந்த 12-ம் தேதி வரை, 18 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், அமெரிக்க பயணத்தை முடித்துக் கொண்டு முதல்வர் ஸ்டாலின் 12-ம் தேதி இரவு சிகாகோவில் இருந்து புறப்பட்டார்.

இன்று காலை  சென்னை விமான நிலையம் வந்த அவருக்கு அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள், கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் கூறுகையில், ‘

’அமெரிக்கா அரசு முறை பயணம் வெற்றி பயணமாகவும், சாதனை பயணமாகவும் அமைந்திருக்கிறது. இது எனக்கான தனிப்பட்ட வெற்றி அல்ல, தமிழக மக்களுக்கான வெற்றி பயணம்.

அமெரிக்காவில் உலகில் புகழ்பெற்ற தலைசிறந்த 25 நிறுவனங்களுடன் நான் சந்திப்பு நடத்தினேன். இதில் 19 நிறுவனங்களுடன் தொழில் முதலீடு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகின. சான்பிரான்சிஸ்கோவில் 8 நிறுவனங்கள், சிகாகோவில் 11 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

இந்த 19 ஒப்பந்தங்கள் மூலம் ரூ.7,618 கோடி முதலீடு தமிழகத்துக்கு குவிந்துள்ளது. இதன்மூலம் மொத்தம் 11,516 பேருக்கு புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் என்று பல்வேறு மாவட்டங்களில் தொழில்கள் தொடங்கப்பட உள்ளது.

இன்னும் பல நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளன.

சென்னையில் ஃபோர்டு நிறுவனம் மீண்டும் உற்பத்தியை தொடங்க உள்ளது. இதற்கான அனைத்து உதவிகளையும் செய்ய உத்தரவிட்டுள்ளேன்.

நான் முதல்வன் திட்டம் வழியாக வளமான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் தொடர்பாக பயிற்சி வழங்குவதற்கான ஒப்பந்தம் கூகுள் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இ.பி.எஸ்., முதல்வராக இருந்த போது வெளிநாடு சென்றதில் 10 சததவீதம் கூட தொழில் துவங்கவில்லை. என்னிடம் ஆதாரம் இருக்கிறது. அதை எல்லாம் சொன்னால் அவருக்கு அவமானமாக இருக்கும். முதலீடுகள் பற்றி விளக்கமாக தெரிவித்துள்ளேன். தொழில்துறை அமைச்சரும் விளக்கம் தந்துள்ளார்’ என்றார்.

அப்போது ஜிஎஸ்டி குறித்து நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா சீனிவாசன் பேசியது தொடர்பாக செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த ஸ்டாலின், ’ ‘ஜிஎஸ்டி குறித்த நியாயமான கோரிக்கைகளை ஓட்டல் உரிமையாளர் முன்வைத்தார். அதனை நிதி மந்திரி கையாண்ட விதம் என்பது மிகவும் வெட்கப்பட வேண்டிய ஒன்று. இதனை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கின்றனர்’, என்றார்.

மேலும் தமிழக அமைச்சரவை மாற்றம் குறித்து பேசிய ஸ்டாலின், ‘நாங்கள் திமுக.. சொன்னதை தான் செய்வோம். செய்வதைத் தான் செய்வோம். இந்த கேள்விக்கான பதிலை நான் ஒரே வரியில் சொல்லி விடுகிறேன். திமுகவின் 75வது ஆண்டு விழா பவள விழா கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் நீங்கள் விரும்பும் அனைத்து மாற்றங்களும் ஏற்படும் சூழல் உருவாகும் என நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *