ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் ஜூனியர் டாக்டர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்கிய போராட்டங்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக நீடித்து வரும் நிலையில், ஒரு முன்னேற்றத்தின் முதல் அறிகுறியாக, கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் குமார் கோயல் உள்ளிட்ட மூத்த காவல்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதார அதிகாரிகளை நீக்குவதாக முதல்வர் மம்தா பானர்ஜி திங்கள்கிழமை அறிவித்தார்.
மம்தா பானர்ஜி திங்கள்கிழமை இரவு, காளிகாட்டில் உள்ள தனது இல்லத்தில் ஜூனியர் டாக்டர்கள் குழுவுடன் முதல் சுற்று பேச்சுவார்த்தை நடத்திய பின்னர், இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
இந்த உயர் அதிகாரிகளை நீக்க வேண்டும் என்பது போராட்டக்காரர்களால் பட்டியலிடப்பட்ட கோரிக்கைகளில் ஒன்றாகும். வினீத் குமார் கோயல் தவிர, துணை போலீஸ் கமிஷனர் (வடக்கு) அபிஷேக் குப்தா, மருத்துவக் கல்வி இயக்குனர் தேபாஷிஷ் ஹல்டர் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குனர் கவுஸ்டாவ் நாயக் ஆகியோரையும் நீக்குவதாக மம்தா பானர்ஜி அறிவித்தார்.
நள்ளிரவு வரை தொடர்ந்த கூட்டத்தில் இருந்து வெளிவந்த, ஜூனியர் டாக்டர்கள் பேச்சுக்கள் “நேர்மறையாக” இருந்ததாகவும், ஆனால் பணியை மீண்டும் தொடங்குவதற்கான இறுதி அழைப்பை எடுப்பதற்கு முன்பு அவர்கள் தங்கள் சக ஊழியர்களுடன் கலந்துரையாட வேண்டும் என்றும் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “ஜூனியர் டாக்டர்களை பணிக்குத் திரும்புமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். ஆலோசித்து முடிவெடுப்போம் என்றார்கள். நான் கொல்கத்தா காவல் ஆணையருடன் பேசினேன், அவர் வெளியேற விரும்புவதாக கூறினார். மருத்துவக் கல்வி இயக்குனர் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குனர் குறித்து, நான் தலைமைச் செயலாளரிடம் தேவையானதைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்… வங்காள மக்கள் எங்களைத் தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். ஜூனியர் டாக்டர்களின் நான்கு கோரிக்கைகளை நாங்கள் ஏற்றுக்கொண்டோம்,” என்று கூறினார்.
புதிய கொல்கத்தா காவல்துறை ஆணையர் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்படுவார் என்று மம்தா பானர்ஜி கூறினார்.
மாலை 6.50 மணியளவில் தொடங்கிய சந்திப்பு இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்ததாக அறியப்பட்டாலும், சந்திப்பின் அறிக்கைகளை முடிக்க இரு தரப்பினரும் மேலும் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக எடுத்துக் கொண்டனர்.
கடந்த வாரம், அரசாங்கம் கூட்ட நடவடிக்கைகளை நேரடியாக ஒளிபரப்புவதற்கான கோரிக்கையை ஏற்காததையடுத்து, ஜூனியர் டாக்டர்கள் மம்தா பானர்ஜியை சந்திக்க மறுத்துவிட்டனர். ஆனால் திங்களன்று, தலைமைச் செயலர் மனோஜ் பந்திற்கு அனுப்பிய மின்னஞ்சலில், “கூட்டத்தின் முழுப் பிரதியுடன் கூடிய அறிக்கைகளை… (இரு தரப்பினராலும்) பதிவுசெய்து வடிவமைத்து… பங்கேற்பாளர்கள் அனைவராலும் முறையாக கையொப்பமிடப்பட்டு கூட்டத்தின் முடிவில் ஒப்படைக்கப்பட வேண்டும்,” என்று தெரிவிக்கப்பட்டது.
போராடும் ஜூனியர் டாக்டர்கள் ஐந்து அம்ச கோரிக்கைகளை பட்டியலிட்டனர்: பாலியல் பலாத்காரம் மற்றும் கொலை தொடர்பான விசாரணையை துரிதப்படுத்தவும், குற்றவாளிகளை தாமதமின்றி தண்டிக்கவும்; முன்னாள் ஆர்.ஜி கர் மருத்துவமனை டீன் டாக்டர் சந்தீப் கோஷ் மற்றும் “நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சாட்சியங்களை சிதைப்பதில் ஈடுபட்டுள்ள” அனைவரையும் இடைநீக்கம் செய்ய வேண்டும்; கொல்கத்தா காவல்துறை ஆணையர் வினீத் குமார் கோயல் நீக்க வேண்டும்; மருத்துவமனை வளாகத்திற்குள் போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும்; மற்றும் “எல்லா சுகாதார வசதிகளிலும் நிலவும் அச்சுறுத்தல் கலாச்சாரத்தை நீக்க வேண்டும்”.
ஜூனியர் டாக்டர்கள் வெளியிட்ட கூட்டத்தின் அறிக்கையின்படி, பாலியல் பலாத்காரம்-கொலை தொடர்பான விசாரணையை விரைவுபடுத்த, வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ.,க்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய மாநில அரசு உறுதியளித்தது. மூத்த காவல்துறை மற்றும் சுகாதார அதிகாரிகளின் இடமாற்றங்கள் தவிர, மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்தில் பாதுகாப்பைக் கவனிக்க, மாநில அரசு தலைமைச் செயலாளர் தலைமையில், உள்துறை செயலாளர், டி.ஜி.பி மற்றும் கொல்கத்தா காவல்துறை ஆணையர் மற்றும் ஜூனியர் மருத்துவர்களின் பிரதிநிதிகள் அடங்கிய, ஒரு பணிக்குழுவை மாநில அரசு முன்மொழிந்தது.
“சி.சி.டி.வி, கழிவறை போன்ற மருத்துவமனை உள்கட்டமைப்பிற்காக ரூ. 100 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது, இது மருத்துவ சகோதரத்துவத்துடன் நெருக்கமான ஆலோசனையுடன் முறைப்படுத்தப்படும்… மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகள் முழுவதும் மருத்துவ உள்கட்டமைப்பில் பயனுள்ள மற்றும் பதிலளிக்கக்கூடிய குறைகளை தீர்க்கும் வழிமுறை ஏற்படுத்தப்படும், மருத்துவ சகோதரத்துவம் எதிர்கொள்ளும் அனைத்து பிரச்சினைகளையும் தலைமைச் செயலாளர் மட்டத்தில் விவாதித்து தீர்க்க நெருக்கமான ஒருங்கிணைப்புடன் செயல்பட கூட்டாக தீர்மானிக்கப்பட்டது” என்று அறிக்கை கூறுகிறது.
“மருத்துவக் கல்லூரிகளில் நிலவும் அச்சுறுத்தல் கலாச்சாரத்தை குறிப்பிட்ட சூத்திரங்கள் மூலம் (ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் சங்கங்கள்…) மேலும் ஆலோசித்த பிறகு அகற்றலாம் என்றும் முன்மொழியப்பட்டது. ஸ்வஸ்த்யா பவனில் நடக்கும் வேலை நிறுத்தம் மற்றும் உள்ளிருப்புப் போராட்டம் குறித்து, அனைத்து ஜூனியர் டாக்டர்களுடனும் கலந்தாலோசித்த பிறகே முடிவு எடுக்கப்படும் என, ஜூனியர் டாக்டர்களின் பிரதிநிதிகள் தெரிவித்தனர்.
வியாழன் அன்று, ஜூனியர் டாக்டர்கள் நபன்னாவில் (மாநில செயலகத்தில்) பேச்சுவார்த்தையில் சேர மறுத்ததை அடுத்து, பானர்ஜி “மக்களின் நலனுக்காக ராஜினாமா செய்யத் தயார்” என்று கூறியிருந்தார். இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவர் சனிக்கிழமையன்று போராட்ட இடத்திற்கு திடீர் பயணம் செய்து, ஜூனியர் மருத்துவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தார்.