தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் வினியோகம் இன்று தொடங்கி உள்ளது.
பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, ஒரு முழுக்கரும்பு அடங்கிய பொங்கல் தொகுப்பை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், 2.20 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுகின்றனர்.
தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து, அனைத்து நியாயவிலைக் கடைகளில் பயனாளிகளுக்கான டோக்கன்கள் அனுப்பப்பட்டு உள்ளது. அந்த டோக்கன்கள் அனைத்தையும் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு, வீடாக சென்று வினியோக்கிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந் நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகத்துக்கான டோக்கன்களை ரேஷன் கடை ஊழியர்கள் பயனாளிகள் வீடுகள்தோறும் வினியோகிக்க தொடங்கி உள்ளனர். அதற்கான பணிகளை அவர்கள் இன்று தொடங்கி இருக்கின்றனர். அனைத்து மாவட்டங்களிலும் டோக்கன்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன.
சிவகங்கை நகராட்சி குடியிருப்பில் கலெக்டர் ஆஷா அஜித் பொங்கல் இலவச பொருட்களுக்கான டோக்கனை குடும்பப் பெண்ணுக்கு வழங்கினார்.
பயனாளிகளுக்கு அளிக்கப்பட்டு உள்ள டோக்கனில் எந்த தேதியில், எந்த நேரத்தில் பரிசு தொகுப்பு வினியோகிக்கப்படும் என்பது குறிப்பிடப்பட்டு உள்ளது. பயனாளிகள் அனைவரும் அந்தந்த நாட்களில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்குச் சென்று பொருட்களை பெற்றுக் கொள்ளலாம்.
வரும்(ஜன) 9ம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகம் தொடங்க உள்ளது.