நடிகர் ஹிப்ஹாப் ஆதி இயக்கி, நடித்துள்ள புதிய படத்தின் கிளிம்ஸ் வீடியோ ரசிகர்களிடையே கவனம் ஈர்த்துள்ளது.
இசையமைப்பாளரான ஹிப்ஹாப் ஆதி, 2017-ல் வெளியான ‘மீசைய முறுக்கு’ திரைப்படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அடுத்து 2021-ல் ‘சிவகுமாரின் சபதம்’ என்ற தனது இரண்டாவது படத்தை இயக்கினார். தற்போது அவர் மூன்றாவது படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்துக்கு ‘கடைசி உலகப் போர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது.
மேலும், படத்தில் நாயகனாக நடிப்பதுடன் இசையும் அமைத்துள்ளார். அத்துடன் படத்தை ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் என்ற தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இந்த சூழலில், இப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் கிளிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
குறிப்பாக விஎஃப்க்ஸ் காட்சிகள் சிறப்பாக வந்திருப்பதாக ரசிகர்கள் சமூல வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். விஎஃப்க்ஸ் காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பெரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள்.
முதல் தோற்றம் ஆதியின் புகைப்படத்துடன், துப்பாக்கி, பீரங்கிகள், குண்டுவெடிப்பு என போர்க்களத்துடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற நடிகர்கள் குறித்த அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக, அண்மையில் வெளியான ஹிப்ஹாப் ஆதியின் ‘PT சார்’ திரைப்படம் ரசிகர்களிடையே பரவலான கவனத்தை பெற்றது குறிப்பிடத்தக்கது.