ராயன் திரைப்படத்தின் டப்பிங் பணிகளை ஒரே ஒரு நாளில் முடித்ததாக நடிகர் எஸ்.ஜே.சூர்யா தெரிவித்துள்ளார்.
தனுஷின் 50-வது படமாக உருவாகியுள்ள ‘ராயன்’ திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த படத்தை தனுஷே எழுதி, இயக்கி, நடித்துள்ளார். இப்படத்தில் துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் நடித்துள்ளனர். கேங்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
கடந்த ஜூன் 13ஆம் தேதி வெளியிடப்பட இருந்த இந்த திரைப்படம் தனுஷின் பிறந்த நாளை முன்னிட்டு ஜூலை 26ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. சமீபத்தில் படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் நேர்காணல் ஒன்றில் படம் குறித்து நடிகர் எஸ்.ஜே.சூர்யா பேசியுள்ளார். அதில், மார்க் ஆண்டனி படத்தில் டப்பிங் பேசி குரலே பாதித்துவிட்டது. ஆனால் ராயன் படத்தில் ஒரேயொரு நாள்தான் டப்பிங் செய்தேன். எனக்கான காட்சிகள் பெரும்பாலும் முக பாவனைகளில் மட்டுமே இருக்கும். ராயபுரத்தின் ஓநாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். நேரடியாக எதையும் செய்ய மாட்டேன். ஆனால் மறைமுகமாக எல்லாப் பிரச்னைகளையும் செயல்படுத்தும் கதாபாத்திரம். அதற்கேற்ப நடித்துள்ளேன்” எனக் கூறியுள்ளார்.