ராஞ்சி: ‘லோக்சபா தேர்தலில் தோல்வியை ஏற்க முடியாமல், காங்., எம்.பி., ராகுல் உட்பட இண்டியா கூட்டணியினர் ஆணவத்தை காட்டுகின்றனர்’ என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடந்த பா.ஜ., செயற்குழு கூட்டத்தில், அமித்ஷா பேசியதாவது: ஜார்க்கண்டில் ஆதிக்கம் செலுத்தும் பழங்குடியினரின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருகிறது. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் 81 சட்டசபை தொகுதிகளில், 52 தொகுதிகளில் ஏற்கனவே தாமரை மலர்ந்துள்ளது. ஜார்க்கண்டில் ஆட்சி அமைப்பதில் பா.ஜ., உறுதியாக உள்ளது. ஆட்சி அமைத்த பிறகு, பழங்குடியின மக்களின் நிலங்கள், இட ஒதுக்கீடு மற்றும் மக்கள்தொகை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுவோம்.
ரூ.12 லட்சம் கோடி ஊழல்
லோக்சபா தேர்தலில் தோல்வியை ஏற்க முடியாமல் ராகுல் உட்பட இண்டியா கூட்டணியினர் ஆணவத்தை காட்டுகின்றனர். இண்டியா கூட்டணி கட்சி தலைவர்கள் ரூ.12 லட்சம் கோடி ஊழல் செய்துள்ளனர். 2014, 2019, 2024ம் ஆண்டுகளில் நடந்த லோக்சபா தேர்தல்களில், மொத்தமாக காங்கிரஸ் வெற்றி பெற்றதை விட, இந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., அதிக தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. ஹேமந்த் சோரன் தலைமையிலான அரசு நாட்டிலேயே மிகவும் ஊழல் நிறைந்தது. அதை நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இவ்வாறு அமித்ஷா பேசினார்.