புதுடில்லி: ‘சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யாமல், அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வைத்து பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதிப்பது சிறந்தது’ என நிடி ஆயோக் உறுப்பினர் அரவிந்த் விர்மானி தெரிவித்தார்.
பி.டி.ஐ., செய்தி நிறுவனத்திற்கு, அரவிந்த் விர்மானி அளித்த பேட்டி: ஒரு பொருளாதார நிபுணரின் பார்வையில், அடுத்த 10 முதல் 15 ஆண்டுகளுக்கு நாம் சீனாவில் இருந்து தான் பொருட்களை இறக்குமதி செய்யும் சூழல் நிலவும் என தெரிகிறது. ஆனால், சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யாமல், அந்நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வைத்து பொருட்களை உற்பத்தி செய்ய அனுமதிப்பது சிறந்தது
அன்னிய நேரடி முதலீடு
உள்ளூர் உற்பத்தியை அதிகரிக்கவும், ஏற்றுமதியை அதிகரிக்கவும், சீனாவில் இருந்து அன்னிய நேரடி முதலீட்டை கோருவது நல்லது. இதனால் சீனாவில் இருந்து நாம் பொருட்களை இறக்குமதி செய்ய ஆகும் செலவு குறையும்.
ஏற்றுமதி
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்வதை தவிர்த்து வருகிறது. இந்நேரத்தில் சீனா நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்து பொருட்களை உற்பத்தி செய்தால் நாம் பிற நாடுகளுக்கு எளிதில் ஏற்றுமதி செய்ய முடியும். இவ்வாறு அவர் கூறினார்.