“ஆளுநர் என்ன மருத்துவரா?” என டெல்லி துணைநிலை ஆளுநர் எழுதிய கடிதத்தை குறிப்பிட்டு டெல்லி அமைச்சர் சௌரப் பரத்வாஜ் விமர்சித்துள்ளார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிபிஐயால் கைது செய்யப்பட்டு தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், கெஜ்ரிவால் தொடர்ந்து உடல் எடை குறைந்து வருவதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கெஜ்ரிவாலுக்கு நீரிழிவு பாதிப்பு உள்ள நிலையில், அவர் முறையாக உணவுகளையும் மருந்துகளையும் எடுத்துகொள்வதில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, அரவிந்த் கெஜ்ரிவால் உடல்நிலை குறித்து தீவிரமாக கண்காணிக்க டெல்லி தலைமைச் செயலருக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சாக்சேனா கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளபடி, கெஜ்ரிவால் உணவுகளையும் மருந்துகளையும் உட்கொள்வதில்லை என்றும், அவருக்கு வீட்டில் சமைத்த உணவுகள் வழங்கப்பட்ட போதிலும், குறைந்த அளவு கலோரி உள்ள உணவுகளையே அவர் எடுத்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும் அந்த கடிதத்தில், கெஜ்ரிவால் இன்சுலின் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்ள அறிவுறுத்தவும் சிறை அதிகாரிகளை கேட்டுக் கொண்டுள்ளார்.