கொல்கத்தா மருத்துவ மாணவி கொல்லப்பட்ட மறுநாளே செமினார் அறையை சுற்றி புதுப்பிக்க ஆணை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உத்தரவிட்டுள்ளார்
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், 31 வயதான பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, கொடூரமான முறையில் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக காவல் துறைக்கு உதவும் தன்னார்வலராகப் பணியாற்றி வந்த சஞ்சய் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டார். இதனையடுத்து, கொல்கத்தா உயா்நீதிமன்ற உத்தரவைத் தொடா்ந்து, இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகின்றது. இந்த சம்பவம் நாடு தழுவிய மருத்துவர்கள் போராட்டத்திற்கு வழிவகுத்தது.
இதில் தொடர்புடைய குற்றவாளி சஞ்சய் ராய் கைது செய்யப்பட்டார். பெரும் போராட்டத்தை தொடர்ந்து வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. மேலும் பெண் மருத்துவர் கொலை குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பான விசாரணை நிலை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் சிபிஐ தாக்கல் செய்தது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.
இதற்கிடையே பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் மட்டுமின்றி, முதுநிலை மருத்துவர்கள் தேர்ச்சிக்கு பணம் பெறுவது, மருத்துவமனையில் போதைப் பொருள் புழக்கம் , கடத்தல் போன்றவற்றிக்கு கல்லூரி முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உடந்தையாக இருந்ததாகவும் புகார் எழுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்து, சந்தீப் கோஷிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். மேலும், கொல்கத்தாவின் பெலிகத்ரா குடியிருப்புப் பகுதியில் உள்ள சந்தீப் கோஷின் இல்லத்தில் கடந்த 25ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 15 நாட்கள் நடந்த விசாரணைக்கு பிறகு சந்தீப் கோஷை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.
இந்த நிலையில் கொல்கத்தா மருத்துவ மாணவி இறந்த மறுநாளே செமினார் அறையை சுற்றி புதுப்பிக்க ஆணை முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பான கோப்புகள் சிக்கியதால் மேலும் சந்தேகம் வலுத்துள்ளது.