வங்கதேசத்தில் இருந்து வெளியேறிய முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இன்னும் சில நாட்கள் இந்தியாவில் தங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
இடஒதுக்கீட்டுக்கு எதிராக வங்கதேச அரசை கண்டித்தும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகக் கோரியும் கடந்த 3 வாரங்களாக மாணவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர். இதுதொடர்பான வன்முறையில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். தொடர் போராட்டத்தையடுத்து, அந்நாட்டு பிரதமர் ஹசீனா தனது பதவியை ராஜிநாமா செய்ததாகவும், அங்கு ராணுவ ஆட்சி அமைக்கப்படுவதாகவும் வங்கதேச ராணுவத் தளபதி நேற்று (ஆக., 5) அறிவித்தார்.
பிரதமர் ஷேக் ஹசீனா, தலைநகர் டாக்காவில் இருந்து விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் வெளியேறி டெல்லி அருகே உள்ள ஹிண்டண் விமானப்படை தளத்திற்கு வந்தடைந்தார். டெல்லியில் வங்கதேச தூதரகம் உள்ள பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், நேற்று இரவே பிரதமர் மோடி தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில் வங்கதேச நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்நிலையில், வங்கதேச நிலைமைகள் தொடர்பாக ஆலோசனை செய்ய டெல்லியில் இன்று (ஆக., 6) மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங், ஜெ.பி.நட்டா, அமித்ஷா, ஜெய்சங்கர் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் வங்கதேச நிலைமை, இந்தியர்களின் பாதுகாப்பு, இந்துக்களின் பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து விவரிக்கப்பட்டது.
வங்கதேச பிரதமர் ஹசீனா உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குநராக டெல்லியில் உள்ள தனது மகள் சைமா வாசேத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. ஹசீனா உயிருக்கு ஆபத்து இருப்பதால் பாதுகாப்பு கருதி அரசு அளிக்கும் இடத்திலே அவர் தங்குவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. பிரதமர் ஹசீனா இந்தியாவில் இருந்து லண்டன் செல்லவிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அவர் இன்னும் சில நாட்கள் இந்தியாவில் இருப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.