சென்னை : ‘அண்ணன் சொல்படியே போதைப்பொருள் கடத்தினோம்’ என, ஜாபர் சாதிக்கின் சகோதரர் முகமது சலீம் வாக்குமூலம் அளித்துள்ளார்.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் சட்ட விரோத பண பரிமாற்ற வழக்குகளில் கைதான, தி.மு.க., முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்,35, புழல் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில், அவரது சகோதரர் முகமது சலீம், 34, நேற்று முன்தினம் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு, ஏழு நாள் காவலில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
அவர் அளித்துள்ள வாக்குமூலம்: எங்களின் பிரதான தொழிலே, ெஹல்த் மிக்ஸ் பவுடர் போல வெளிநாடுகளுக்கு, ‘சூடோ எபிட்ரின்’ போதைப்பொருள் கடத்துவது தான். 2015ல் தொழிலை விரிவுப்படுத்தி விட்டோம். கைது நடவடிக்கையில் இருந்து எங்களை காத்துக்கொள்ள அண்ணன் ஜாபர் சாதிக், தி.மு.க.,வில் சேர்ந்தார். என்னை வி.சி., கட்சியில் சேர்த்து விட்டார்.
வெளிநாடுகளில் உள்ள போதைப்பொருள் கடத்தல் கும்பலிடம் எங்கள் செல்வாக்கை நிரூபிக்க, அரசியல் கட்சிகளின் தலைவர்களுடன் படம் எடுத்து, அவர்களுக்கு அனுப்பினோம். இதனால், எங்கள் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது.
இதை பயன்படுத்தி, அண்ணன் ஜாபர் சாதிக் சொல்படி, மலேஷியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளுக்கு போதை பொருள் கடத்தினோம். இதன் வாயிலாக, சட்ட விரோத பண பரிமாற்றத்திலும் ஈடுபட்டோம். இவ்வாறு முகமது சலீம் வாக்குமூலம் அளித்துஉள்ளார்.