புதுடில்லி; யு.பி.எஸ்.சி.,யில் lateral entry முறையில் பணி நியமனம் செய்யப்படுவதற்கு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
நேரடி நியமனம்
மத்திய அரசின் 24 அமைச்சகங்களில் காலியாக இருக்கும் உயர் பதவிகளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு பதிலாக தனியார் துறைகளில் நிபுணத்துவம் பெற்ற வல்லுநர்களை நேரடியாக நியமிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான விளம்பரத்தை அண்மையில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
எதிர்ப்பு
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காங்கிரஸ் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளன. இந் நிலையில் ஆளும் பா.ஜ. அரசின் கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகள் தற்போது எதிர்ப்புக் குரலை எழுப்பி உள்ளன. இது குறித்து கூட்டணிக் கட்சியான லோக் ஜனசக்தி கட்சியின் தலைவரும், மத்திய அமைச்சருமான சிராக் பாஸ்வான் கூறி உள்ளதாவது:
ஆதரவு இல்லை
மத்திய அரசின் இதுபோன்ற நியமனங்களுக்கு எப்போதுமே தங்கள் ஆதரவு இல்லை. அரசின் நியமனங்கள் எங்கு பின்பற்றப்படுகிறதோ அங்கு எல்லாம் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும். அமைச்சராக இருக்கும் நான் இந்த அரசின் அங்கம்.
தவறான நடைமுறை
எனவே, இந்த பிரச்னைகள் குறித்து கேள்வி எழுப்புவேன். எங்கள் கட்சி இதுபோன்ற நடைமுறையை முற்றிலும் எதிர்க்கிறது. முழுக்க, முழுக்க தவறான நடைமுறை என்று கூறி உள்ளார்.
இட ஒதுக்கீடு
மத்திய பா.ஜ., அரசின் மற்றொரு முக்கிய கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதாதளமும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளது. இது குறித்து, அக்கட்சியின் தேசிய செய்தித்தொடர்பாளர் கே.சி. தியாகி கூறி உள்ளதாவது: அரசின் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு அவசியம் பின்பற்றப்பட வேண்டும் என்பது எப்போதும் வலியுறுத்தும் கட்சி ஐக்கிய ஜனதாதளம்.
பிரச்னை
பல நூற்றாண்டுகளாக சமூக கட்டமைப்பில் பின்தங்கிய நிலையில் மக்கள் இருக்கும் போது எதற்கு தகுதி அடிப்படையில் நியமிக்க வேண்டும்? அரசின் இத்தகைய உத்தரவு மிகவும் முக்கியமான பிரச்னை என்று தெரிவித்துள்ளார்.