ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலில், பரூக் அப்துல்லா உடன் கூட்டணி வைத்துள்ள, காங்கிரசிற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சரமாரி கேள்வி எழுப்பி உள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு வரும் செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. சட்டசபை தேர்தலில், பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி வைத்துள்ளது. இது தொடர்பாக கண்டனம் தெரிவித்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் கட்சிக்கு சரமாரி கேள்விகளை எழுப்பி உள்ளார்.
அமித்ஷா எழுப்பிய பத்து கேள்விகள் பின்வருமாறு:
* ஜம்மு காஷ்மீருக்கு தனிக் கொடி என்ற தேசிய மாநாட்டுக் கட்சியின் வாக்குறுதியை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?
* சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் மீட்டெடுக்கும் பரூக் அப்துல்லாவின் முடிவை ராகுல் ஆதரிக்கிறாரா? இதன் மூலம் மீண்டும் காஷ்மீரில் அமைதியின்மை மற்றும் பயங்கரவாதத்தை கொண்டு வர முயற்சியா?
* காஷ்மீர் இளைஞர்களுக்குப் பதிலாக பாகிஸ்தான் இளைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் பிரிவினைவாதத்தை மீண்டும் ஊக்குவிப்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?
* பாகிஸ்தானில் வர்த்தகம் துவங்கும் தேசிய மாநாட்டுக் கட்சியின் முடிவை காங்கிரஸ் கட்சியும், ராகுலும் ஆதரிக்கிறார்களா?
* பயங்கரவாதம் மற்றும் கல்வீச்சு சம்பவங்களில் ஈடுபட்டவர்களின் உறவினர்களை மீண்டும் அரசுப் பணிகளில் சேர்த்து, பயங்கரவாதத்தை மீண்டும் கொண்டு வர காங்கிரஸ் ஆதரிக்கிறதா?
* இந்த கூட்டணி காங்கிரஸ் கட்சியின் இடஒதுக்கீட்டுக்கு எதிரான போக்கை அம்பலப்படுத்தியுள்ளது.
* தலித்துகள் உள்ளிட்ட சமூகத்தினருக்கான இடஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வந்து, அவர்களுக்கு அநீதி இழைக்க நினைப்பதை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?
* ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரத்தை மீண்டும் ஊழலில் தள்ளி, பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களிடம் ஒப்படைக்கும் அரசியலை காங்கிரஸ் ஆதரிக்கிறதா?
* தேசிய மாநாடு கட்சியின் பாரபட்சமான அரசியலை காங்கிரஸ் கட்சி ஆதரிக்கிறதா?
* காஷ்மீருக்கு சுயாட்சி வழங்கும், தேசிய மாநாட்டு கட்சியின் பிரித்தாளும் அரசியலை காங்கிரஸ் கட்சியும் ராகுலும் ஆதரிக்கிறார்களா?. இவ்வாறு அமித் ஷா கேள்வி எழுப்பி உள்ளார்.