துாத்துக்குடி: பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்யவில்லை எனக்கூறி, துாத்துக்குடி மாவட்ட தி.மு.க., சார்பில், மத்திய அரசை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில், கனிமொழி எம்.பி., பேசியதாவது:
மத்திய அரசு தாக்கல் செய்துள்ள பட்ஜெட், ஒட்டுமொத்த இந்தியாவுக்கானது அல்ல. இரு மாநிலங்களுக்கு மட்டுமே அறிவித்துள்ளனர்.
ஒரு மாநிலத்தின் பட்ஜெட் போல உள்ளது, தொடர்ந்து மாநில உரிமைகளை, மாநில வரிகளை பறித்துக் கொண்டு, மாநிலங்களுக்கு வரவேண்டிய நிதியை தரவில்லை என்றால், மாநிலத்தை எப்படி நிர்வகிப்பது.
மக்களுக்கு தேவையான சாலை வசதிகள் உட்பட அடிப்படை வசதிகளை எவ்வாறு நிவர்த்தி செய்வது என தெரியவில்லை. தங்களது ஆட்சியை காப்பாற்றிக் கொள்வதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.
தங்களுக்கு ஓட்டளிக்காத மக்களை வஞ்சிக்கின்ற ஆட்சியாக மத்திய பா.ஜ., ஆட்சி செயல்படுகிறது. சென்ற ஆண்டைவிட தற்போது குறைவான நிதியையே மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. கிராமப்புறங்களில் இருக்கின்ற சாமானிய மக்களை ஏமாற்றக்கூடிய ஒரு பட்ஜெட்.
பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்காகவும், அவர்களை பாதுகாப்பதாகவும் மத்திய பட்ஜெட் உள்ளது. பணக்கார முதலாளிகளை வளர்த்து விடும் திட்டங்கள் மட்டுமே உள்ளன.
மக்கள் விரோத பட்ஜெட்டாக பா.ஜ., அரசின் பட்ஜெட் உள்ளது. தமிழக மக்களுக்கும், நல்லாட்சிக்கும் எதிராக உள்ள இந்த மத்திய பா.ஜ., அரசை விரைவில் பதவியில் இருந்து இறக்கி காட்டுவோம்.
அது விரைவில் நடக்கும். ஏழை மக்களுக்கான பட்ஜெட் கொடுக்கும் அரசு அமைய வேண்டும். அதற்கான ஆட்சியை விரைவில் உருவாக்கி காட்ட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
துாத்துக்குடியை போலவே தமிழகம் முழுதும் மத்திய அரசை கண்டித்து தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.