‘தோல்விகளை மறைக்க நாயுடு முயற்சி, இது பழிவாங்கும் அரசியல்’: லட்டு விவகாரம் பற்றி திருப்பதி எம்.பி பேட்டி

திருப்பதி கோயில் லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திரப் பிரதேச அரசை உச்ச நீதிமன்றம் கடிந்து கொண்டது. கடவுளை அரசியலில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று கூறிய நிலையில்,  திருப்பதி எம்.பி மட்டிலா குருமூர்த்தி, இது முதல்வரின் அரசியல் பழிவாங்கும் முயற்சியின் ஒரு பகுதி என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் (ஒய்எஸ்ஆர்சிபி) நான்கு எம்.பி.க்களில் ஒருவரான குருமூர்த்தி, குற்றச்சாட்டுகளில் ஏன் உண்மை இல்லை என்பதையும், சமீபத்திய மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு கட்சி எவ்வாறு மீண்டும் கட்டமைக்கப்படுகிறது என்பதையும் விளக்கி கூறினார்.

திருப்பதி லட்டு சர்ச்சை பற்றி உங்கள் கருத்து?

இது பழிவாங்கும் அரசியல் ரீதியான குற்றச்சாட்டு. இந்த குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை. திருமலை திருப்பதி தேவஸ்தான (TTD) வாரியத்தில் பல மாநிலங்களில் இருந்து முக்கியமான நபர்கள் உள்ளனர். பொருட்கள் வாங்குவது, கொள்முதல் செய்வது மற்றும் பிற சிக்கல்களைக் கண்காணிக்க துணைக் குழுக்கள் உள்ளது.

வாரியம், பேனல்களுடன் கலந்தாலோசித்து, டெண்டர் மூலம் பொருட்களை கொள்முதல் செய்து வருகிறது.

வழக்கமாக மைசூரில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பப்படும் மாதிரிகள் முதல் முறையாக குஜராத்தில் உள்ள தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் (NDDB) ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. NDDB அறிக்கையும் கலப்பட பொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தவில்லை. கலப்படம் செய்யப்பட்ட பொருட்களால் பிரசாதமோ, லட்டுகளோ தயாரிக்கப்படவில்லை. TTD நிர்வாக அதிகாரி (ஷியாமளா ராவ்) ஜூலை மாதம் இதை மீண்டும் வலியுறுத்தினார்.

பிறகு, நாயுடு ஏன் இப்போது குற்றஞ்சாட்டினார்?

ஜூன் மாதம் தெலுங்கு தேசம் கட்சி (டிடிபி) ஆட்சிக்கு வந்ததில் இருந்து எந்த வளர்ச்சியும் இல்லை. நாயுடுவின் “சூப்பர் சிக்ஸ்” உத்தரவாதங்கள் கூட நடைமுறைப்படுத்தப்படவில்லை மற்றும் அவரது அரசாங்கம் “பழிவாங்கும் அரசியலில்” கவனம் செலுத்துவதால் இன்னும் பட்ஜெட்டை தாக்கல் செய்யவில்லை.

நாயுடு தனது அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க ஒரு கதையை அமைக்க முயன்றார். அவர்கள் தங்கள் சுயநல நோக்கங்களுக்காக கடவுளைப் பயன்படுத்தினர்.

நாயுடு ஆட்சிக்கு வந்ததில் இருந்து இதுவரை 37 அரசியல் கொலைகள் நடந்துள்ளன. ஒய்எஸ்ஆர்சிபி தலைவர்களின் 900க்கும் மேற்பட்ட சொத்துக்கள் இடிக்கப்பட்டன, அக்கட்சியை ஆதரித்த 2,000 குடும்பங்கள் மாநிலத்தை விட்டு வெளியேறியுள்ளன.

அதிகாரிகள் மீதும் பொய் வழக்குகள் போட்டு துன்புறுத்துகின்றனர். 70 க்கும் மேற்பட்ட தேவஸ்தான ஊழியர்கள் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக NDA அரசாங்கத்திடம் இருந்து நோட்டீஸ் பெற்றனர்.  அது எதுவும் வெளிவராததால், அவர்கள் லட்டு அரசியலுக்கு சென்றனர் என்றார்.

கோவில் உங்கள் தொகுதிக்கு உட்பட்டது. அது உங்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியதா?

மக்கள் தங்கள் துயரங்களை என்னுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வாக்குறுதிகளை அளித்து, நிறைவேற்றாமல் முதுகில் குத்தியுள்ளது. அவர்களின் கவனத்தை திசை திருப்ப, லட்டு குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

ஜெகனின் மதம் பற்றி பேசும் டி.டி.பி. அவரின் திருப்பதி பயணமும் ரத்து செய்யப்பட்டது. அது பற்றி?

யாரேனும் முறையற்ற உடை அணிந்து பக்தியுடன் சென்றால் அது பற்றி கேட்பதற்கு டி.டி.பிக்கு உரிமை உள்ளது, ஆனால் மற்ற நேரங்களில் அது தேவையில்லை. அனைத்து சமூகத்தினரும் தினமும் கோயிலுக்கு வருகை தருகிறார்கள், அவர்கள் (விருப்பங்களை) கேட்கப்படுவதில்லை.

லட்டு சர்ச்சைக்கு பவன் கல்யாணின் பதில் பற்றி உங்கள் கருத்து?

கல்யாணைப் பொறுத்தமட்டில், அவரது செயல்களும் அறிக்கைகளும் மிகவும் முதிர்ச்சியற்றவை. நடக்காத ஒன்றிற்காக “தவம்” செய்கிறார்.

ஒய்எஸ்ஆர் காங்கிரஸின் தேர்தல் தோல்வி பற்றி?

அடிமட்டத்தில் இருந்து குழுக்களையும் கட்சியையும் மறுசீரமைக்கவும், மக்களுக்காகப் போராடவும், அவர்களுக்காக நிற்கவும் எங்கள் முதல்வர் எங்களிடம் கூறியுள்ளார். அதற்கான செயல்முறை நடந்து வருகிறது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *