மேகதாது திட்ட பணிகளை துரிதப்படுத்த முடிவு சுதந்திர தின விழாவில் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு: ”மேகதாது அணை திட்டத்துக்காக, நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த, காவிரி நீர் வாரிய மண்டல அலுவலகம், துணை மண்டல அலுவலகங்கள், மைசூரில் இருந்து பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன,” என, சுதந்திர தின விழாவில் முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

கர்நாடக அரசு சார்பில், பெங்களூரு மானக் ஷா பரேட் மைதானத்தில், நாட்டின் 78வது சுதந்திர தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. முதல்வர் சித்தராமையா, தேசிய கொடி ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுகொண்டார்.

பொருளாதார மேம்பாடு

பின், அவர் பேசியதாவது:

நாட்டுக்கு சுதந்திரம் பெற்று தந்த மகான்களை மறக்க முடியாது. ‘கிரஹ லட்சுமி, சக்தி, கிரஹ ஜோதி, அன்னபாக்யா, யுவநிதி’ ஆகிய ஐந்து வாக்குறுதி திட்டங்களும், கொடுத்த வாக்குறுதிப்படி, நிறைவேற்றப்பட்டன. மாதந்தோறும் 4,000 முதல், 5,000 ரூபாய் வரை கிடைப்பதால், ஏழைகள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்த திட்டங்கள் நிறைவேற்றப்பட்டால், அரசு திவாலாகி விடும் என்று கூறினர். தற்போது, பொருளாதாரம் மேம்படுத்தி, பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது.

சக்தி திட்டத்தின் கீழ், 270 கோடி மகளிர் இலவசமாக பயணம் செய்துள்ளனர். இதன் மதிப்பு, 6,541 கோடி ரூபாய். ‘அன்னபாக்யா’ திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு அரிசி வழங்க, மத்திய அரசு மறுத்து விட்டதால், பணமாக வழங்கப்படுகிறது. இதற்காக, 13,027 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. இந்த வாக்குறுதி திட்டங்கள் தொடரும்.

நாங்கள் ஆட்சிக்கு வந்த முதலாம் ஆண்டில், மாநிலத்தில் கடும் வறட்சி நிலவியது. இந்தாண்டு, கடும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. மத்திய அரசு தாமதமாக நிவாரண நிதி வழங்கியது. அதுவரை காத்திருக்காமல், மாநில அரசு நடவடிக்கை மேற்கொண்டது.

ரூ.100 கோடி

கல்யாண கர்நாடகா மண்டலத்தில், 5,000 கோடி ரூபாயில், இந்தாண்டு வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படும். சிக்கமகளூரு, தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தர கன்னடா, குடகு, ஷிவமொகா, ஹாசன் ஆகிய மாவட்டங்கள் மேற்கு தொடர்ச்சி மலைகள் கடந்து செல்கின்றன. இந்த மாவட்டங்களின், 1,351 கிராமங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. நிலச்சரிவு பாதிப்புகளை தடுக்க, 100 கோடி ரூபாய் ஒதுக்கப்படும்.

எத்தினஹொளே குடிநீர் திட்டத்துக்கு, 855.02 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. மேகதாது அணை திட்டத்துக்காக, நிலம் கையகப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்துவதற்காக, காவிரி நீர் வாரிய மண்டல அலுவலகம், துணை மண்டல அலுவலகங்கள் மைசூரில் இருந்து பெங்களூருக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன.

மத்திய அரசு பாரபட்சம்

மக்கள் நல திட்டங்களை அமல்படுத்துவது மாநில அரசின் பொறுப்பு. இதற்கான வளத்தை வழங்குவது மத்திய அரசின் பொறுப்பு. ஆனால், சமீப காலமாக மத்திய அரசு, தன் பொறுப்பில் இருந்து விலகி வருகிறது. மாநிலங்களுக்கு மானியம் வழங்குவதில் பாரபட்சம் காண்பிக்கிறது.

அரசியல் அமைப்பு சட்டத்தின் விருப்பத்தை புறக்கணித்து, மாநிலங்களுக்கு உரிய நிதி தருவதில் பாரபட்சம் காட்டுகிறது. நிவாரண நிதியை பெறுவதற்கும், நீதிமன்றத்தை அணுக வேண்டிய நிலை உள்ளது. இது, பொது நலனுக்கு நல்லதல்ல.

மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் தான், நாட்டின் வளர்ச்சி சாத்தியம். எனவே, மாநிலங்களுக்கு மானியம் வழங்க வேண்டும் என்று மத்திய அரசை வலியுறுத்துகிறேன்.

இம்முறை நடந்த லோக்சபா தேர்தலில், வாக்காளர்கள், தங்களின் அரசியல் முதிர்ச்சியை வெளிப்படுத்தி உள்ளனர். இது, ஜனநாயகம் யாருடைய கைப்பாவையாகவும் இருக்க முடியாது என்பதை உணர்த்துகிறது. மக்கள் தீர்ப்பை மீறி, பின்வாசல் வழியாக ஆட்சியை பிடிக்கும் அரசியலை, மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *