சென்னை: உதயநிதி ஸ்டாலினுக்கு நல்ல அரசியல் எதிர்காலம் இருப்பதாகவும், ‘பழைய ஸ்டூடன்ட்ஸ் தான் பிரச்னை’ என்றும் நடிகர் ரஜினி பேசியது, தி.மு.க.,வினர் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.
கலைஞர் எனும் தாய்
மறைந்த முன்னாள் முதல்வரும். தி.மு.க., தலைவருமான கருணாநிதி குறித்து அமைச்சர் எ.வ.வேலு, ‘கலைஞர் எனும் தாய்’ என்னும் பெயரில் புத்தகம் ஒன்றை எழுதி உள்ளார். இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று நடைபெற்றது.
கண்ணீர்விட்டவர்
புத்தகத்தை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, அதை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார். பின்னர் அவர் விழாவில் பேசியபோது, கருணாநிதியை பற்றியும் அவரின் அரசியல் ஆளுமை, தமக்கான விமர்சனங்களை அவர் கையாண்ட விதம் குறித்தும் விரிவாக பேசினார். மருத்துவமனையில் தான் இருந்த போது தம்மை பார்த்து கண்ணீர்விட்டவர் என்றும் அவர் பழைய சம்பவங்களை நினைவு கூர்ந்தார்.
தொடக்கம்
இந்த விழாவின் தொடக்கத்தில் ரஜினிகாந்த் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து சில விஷயங்களை பேசினார். தமது பேச்சின் தொடக்கத்தில் அவர், உதயநிதியை ஏகத்துக்கும் புகழ்ந்தார்.’எனது பாசத்துக்குரிய, இப்போது கொஞ்ச நாளில் அரசியலில் நுழைந்து, கடினமாக உழைத்து பேச்சில் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக் கொண்டு மக்கள் மத்தியில், தொண்டர்கள் மத்தியில் அருமையான பெயர், புகழ் பெற்று தனக்கு ஒரு நல்ல, அரசியலில் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை நிரூபித்துக் கொண்டு இருக்கிறார் அன்புத்தம்பி உதயநிதி ஸ்டாலின்’ என்றார்.
வணக்கம்
ரஜினி பேசிய போது மேடையில் அமர்ந்திருந்த உதயநிதி ஸ்டாலின், நன்றி தெரிவிப்பது போல் இரு கைகளை கூப்பி வணக்கம் சொன்னார்.
ரஜினிகாந்தின் இந்த லேட்டஸ்ட் பேச்சு பற்றி தி.மு.க.,வின் முக்கிய பிரமுகர்கள் பல்வேறு கருத்துகளைக் கூறி வருகின்றனர்.
அடுத்த சந்ததி
விழாவில் பேசிய ரஜினி, ஸ்டாலின் தி.மு.க.,வை திறமையாக வழிநடத்துகிறார் என்றும், ‘பழைய ஸ்டூடன்ட்ஸ் தான் பிரச்னை’ என்றும், தி.மு.க.,வின் மூத்த தலைவர்களை இலைமறை காயாக குறிப்பிட்டு கிண்டலாக விமர்சனம் செய்துள்ளார்.
நல்ல எதிர்காலம்
கட்சியின் மூத்தவர்கள், ஸ்டாலின் தலைமையை ஏற்க மறுத்த சீனியர்கள், உதயநிதி தலைமைக்கு வரவேற்பு தெரிவிக்கவில்லை என்ற பேச்சு உள்ளது. அதை சுட்டிக்காட்டும் வகையில் தான், ரஜினி பேசியதாக கட்சியினர் நம்புகின்றனர்.வழக்கமாக ரஜினிகாந்த் மேடைப்பேச்சு என்பது உண்மை, யதார்த்தம், நிகழ்கால அரசியல், நகைச்சுவை, அறிவுரை என சகலமும் கலந்து இருக்கும். அது போன்றதொரு ஸ்டைலிஷ் பேச்சை தான் இப்போதும் கேட்க முடிந்தது என்று பூரிக்கின்றனர் அவரது ரசிகர்கள்.