காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங்கை கொல்ல சதி: இந்திய அரசுக்கு அமெரிக்க நீதிமன்றம் சம்மன்

கடந்த ஆண்டு அமெரிக்காவில் தன்னை படுகொலை செய்ய சதி செய்ததாக நஷ்டஈடு கோரி காலிஸ்தான் ஆதரவாளர் குர்பத்வந்த் சிங் பன்னுன் தொடுத்த வழக்கில் இந்திய அரசு, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் முன்னாள் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (Research and Analysis Wing – RAW) தலைவர் சமந்த் கோயல் உள்ளிட்டோருக்கு யுனைடெட் ஸ்டேட்ஸ் மாவட்ட நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

அடுத்த 21 நாட்களில் இந்த விவகாரத்தில் பதிலளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வியாழன் அன்று இதற்கு பதிலளித்த வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி ’இவை முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள். இந்தக் குறிப்பிட்ட வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதனால் அடிப்படை விஷயங்களைப் பற்றி எங்கள் பார்வை மாறாது. நான் உங்கள் கவனத்தை இந்த வழக்கின் பின்னணியில் இருக்கும் நபரின் பக்கமே திருப்புகிறேன், அவருடைய முன்னோடிகள் யார் என அனைவருக்கும் தெரியும்.

அந்த நபர் பிரதிநிதித்துவம் செய்யும் அமைப்பு, சட்டத்துக்குப் புறம்பானது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும் நோக்கில் தேசவிரோத மற்றும் நாசகார நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக சட்டத்துக்குப் புறம்பான நவடிக்கைகள் தடுப்புச் சட்டம் 1967ன் (Unlawful Activities Prevention Act of 1967) கீழ் சட்டத்துக்குப் புறம்பான அமைப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது’, என்றார்.

கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நிகில் குப்தா மற்றும் விக்ரம் யாதவ் ஆகிய 2 பேருக்கும் அமெரிக்க நீதிமன்றம் சம்மன் அனுப்பியிருக்கிறது.

இதில் நிகில் குப்தா கடந்த ஆண்டே செக் குடியரசில் கைது செய்யப்பட்டு அமெரிக்க அரசின் கோரிக்கையின்படி அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

விக்ரம் யாதவ், ரா (RAW) அதிகாரி, இவர் பன்னுன் கொலை முயற்சியின் பின்னணியில் செயல்பட்டதாகவும், இதற்கு அப்போதைய RAW தலைவர் சமந்த் கோயல் அனுமதியளித்ததாகவும் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகைத் தெரிவிக்கிறது.

காலிஸ்தான் தனி நாடு கோரும் சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னுன். இவர் அமெரிக்க மற்றும் கனடா நாடுகளின் குடியுரிமையைப் பெற்றவர். இந்தியாவுக்கு எதிராக பன்னுன் தொடர்ந்து செயல்பட்டு வந்ததையடுத்து அவரை இந்தியா தீவிரவாதியாக அறிவித்தது.

இதனிடையே. தனது உயிருக்கு இன்னும் அச்சுறுத்தல் இருப்பதாக பன்னுன் கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி நாளை (செப்.21) முதல் செப்.23 வரை அமெரிக்காவில் நடைபெறவிருக்கும் குவாட் உச்சிமாநாட்டில் பங்கேற்க திட்டமிட்டுள்ள சூழலில், பன்னுனின் வழக்கில் அமெரிக்க நீதிமன்றம் இந்தியாவுக்கு சம்மன் அனுப்பியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *