சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இருந்து மணலி மண்டலத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள டபேதார் மாதவி, மேயர் பிரியாவிற்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் மனித உரிமை மீறல் என்றும் டபேதார் மாதவி குற்றம்சாட்டி உள்ளார்.
ஆவடியைச் சேர்ந்தவர் மாதவி (50). கடந்த 2009-ம் ஆண்டு அலுவலக உதவியாளராக சென்னை மாநகராட்சியில் பணியில் சேர்ந்தார். மாநகராட்சி மேயராக ஆர்.பிரியா பொறுப்பேற்ற பிறகு, அவரது டபேதாராக கடந்த 2 ஆண்டுகளாக பணியாற்றி வந்தார். மேயர் வரும்போது அவருக்கு முன்பாக சென்று, மேயர் வருகிறார் என்று அறிவிப்பது டபேதார் பணி. இவர் கடந்த மாதம் மணலி மண்டல அலுவலகத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்கு, அவர் உதட்டுச் சாயம் பூசி பணிக்கு வருவதுதான் காரணம் என்று தகவல் வெளியானது.
இதைத் தொடர்ந்து, டபேதார் மாதவிக்கு கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி மேயர் பிரியாவின் தனிச்செயலாளர் சிவசங்கர் மெமோ அளித்துள்ளார். அதில், “நீங்கள் பணிக்குத் தாமதமாக வருகிறீர்கள். கொடுக்கப்பட்ட பணியை சரியாக செய்வது இல்லை.. மற்றும் உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை மீறியுள்ளீர்கள் என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கு டபேதார மாதவி பதில் அளித்த பின்னர், அவர் மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இந்நிலையில், சென்னை மாநகராட்சி மேயர் பிரியாவிற்கு இணையாக லிப்ஸ்டிக் போட்டதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், இது பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதி என்றும் மனித உரிமை மீறல் என்றும் டபேதார் மாதவி குற்றம்சாட்டி உள்ளார்.
இது குறித்து டபேதார் மாதவி ஊடகங்களில் கூறுகையில், “சமீபத்தில் வந்து, நீங்கள் லிப்ஸ்டிக் எல்லாம் போடக்கூடாது என்று சொல்லி ஒரு வார்னிங் கொடுத்தார்கள். என்னை மட்டுமல்ல, என்னோடு சேர்ந்து சக ஊழியர்கள் இரண்டு 3 பேருக்கு வார்னிங் கொடுத்தார்கள். அவர்களின் பெயரை சொல்ல விரும்பவில்லை. அப்போது ஒரு சக ஊழியரை பார்த்து, இவர்களை போல் நீங்கள் லிப்ஸ்டிக் போடுங்க.. உங்களுடைய லிப்ஸ்டிக்கும், மேடமுடைய லிப்ஸ்டிக்கும் ஒரே மாதிரி இருக்கிறது. நீங்கள் அந்த மாதிரி போடக்கூடாது என்றார்கள். அதற்கு நான் சொன்னேன். நான் சின்ன வயதில் இருந்தே போட்டுக் கொண்டிருக்கிறேன். இதை இப்போது என்னால் மாற்ற முடியாது. எனக்கு என்ன பிடிக்கிறதோ, அதை தான் நான் பயன்படுத்த முடியும். நான் வேலையில் சரியாக உள்ளேனா, அதை பாருங்கள். என்று கூறிவிட்டு அமைதியாக வந்துவிட்டேன். அதன்பிறகு தான், ஒரு வாரத்தில் குற்றச்சாட்டு வைத்தார்கள். எங்கள் அலுவலகத்தில் உள்ளே இருக்கும் ஊழியர்களிடமே, ஒருத்தரை ஒருத்தர் பேசிக்கொள்ளக்கூடாது என்ற ரூல் இருக்கிறது. ஆனால், நான் பக்கத்து செக்சனை தாண்டி வெளியே ரெஸ்ட்ரூம் போகும் போது யாரையாவது நேராக சந்திக்கும் போது, ஹாய் சொல்வேன், குட்மார்னிங் சொல்வேன். ஆனால், அவர்கள் என்னிடம் என்ன பேசினீர்கள், இங்கு நடப்பதை என்ன சொன்னீர்கள் என்று கேட்டார்கள். என்னை பொறுத்தவரை இன்னும் சர்வீஸ் உள்ளது. எனக்கு எல்லாருமே வேண்டும். சக ஊழியர்களுக்கு ஹாய் சொல்வதில் என்ன தவறு. இரண்டாவது நான் வேலை நேரத்தில் பக்கத்து செக்சன் போனால், இதை குற்றச்சாட்டாக வைக்கிறார்கள்.
இப்படி சொன்னால் இது மனித உரிமை மீறல் ஆகும். லிப்ஸ்டிக் போடக்கூடாது என்று அரசாணையில் உள்ளதோ. அந்த அரசாணைக்கு நான் கட்டப்டுகிறேன் என்றேன். ஆனால், அதற்கு எதுவுமே பதில் வரவில்லை. அடுத்த சில நாளில் இரவு 7.30 மணிக்கு அலுவலகத்தில் இருந்தேன். எனக்கு மண்டல மாறுதல் பணியிட மாற்றம் வந்தது. மணலிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டேன்.. கடைசியாக மேயர் பிரியா அவர்களை பார்த்தேன். அவர்கள் என்னை நன்றாக வேலை செய்யுங்கள் என்று வாழ்த்தி அனுப்பினார். நான் கடந்த ஒரு மாதமாக அங்குதான் வேலை செய்கிறேன். ஆனால் எனக்கு கொடுத்த மெமோ எப்படி மீடியாவிற்கு வந்தது என்று தெரியவில்லை. இதைக் கேட்டதில் இருந்து பலரும் போனில் அழைக்கிறார்கள். சரியாக வேலை செய்யவில்லையா. இதனால் உங்களுக்கு பணியிட மாற்றம் கொடுத்தார்களா என்று கேட்டார்கள். என்னுடைய வேலை எப்படி என்றால், மன்றக்கூட்டம் நடக்கிறது என்றால், ஒரு ஆண் போல், பிற்பகல் 3 மணி வரை அப்படியே ஒரே இடத்தில் நிற்பேன்.
ஒரு மீட்டிங் நடந்தால், அவர்கள் கண்களையே பார்த்து நிற்போம். டீ கேட்கிறாரா, காபி கேட்கிறாரா என்று அவருக்கு உதவுவதற்காக அவரையே பார்த்து நிற்போம். வீட்டுக்கு உடனே போக வேண்டும் என்று நான் கேட்கவே மாட்டேன். இரவு 12 மணி ஆனாலும் நான் இருப்பேன். மழை நேரத்தில் இரவெல்லாம் இருந்தேன். என்னுடைய வேலையில் நான் சரியாகவே இருந்தேன்.” என்று டபேதார் மாதவி கூறியுள்ளார்.
மேயர் பிரியாவுக்கு இணையாக லிப்ஸ்டிக் பூசியதால் பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக டபேதார் மாதவி குற்றம்சாட்டிய நிலையில், இதற்கு சென்னை மாநகராட்சி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. டபேதார் மாதவி இடமாற்றம் செய்யப்பட்டதற்கு அவர் பணிக்கு தாமதமாக வந்ததே காரணம் என்றும் அவரை யாரும் இங்கே லிப்ஸ்டிக் பூசக்கூடாது என சொல்லவில்லை என்று தெரிவித்துள்ளனர்.